நாகர்கோவில் அருகே உள்ள வில்லுக்குறி, திருவிடைக்கோட்டையைச் சேர்ந்தவர் தாணப்பன். இவரது மகள் ஷீபா (வயது 28). இவருக்கும் செந்தில்குமார் என்பவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றனர். அதன் பின்பு ஷீபா அதே பகுதியைச் சேர்ந்த அய்யப்பன் என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 4 வயதில் அபர்ணா என்ற பெண் குழந்தை உள்ளது.
பெயிண்டர் வேலை பார்த்த அய்யப்பன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டு வேலைக்கு சென்றார். எனவே ஷீபா தனது மகளுடன் திருவிடைகோட்டில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார். ஷீபா நேற்று மாலையில் மனம் உடைந்த நிலையில் காணப்பட்டார்.
யாருடனும் பேசாமல் மகளை மட்டும் வீட்டுக்குள் அழைத்துச் சென்று நள்ளிரவு ஒரு மணி அளவில் ஷீபாவின் வீட்டில் தீப்பிடித்து எரிந்தது. அதோடு ஷீபாவின் அலறல் சத்தம் அவரது குழந்தையின் அழுகையும் அக்கம் பக்கத்தாருக்கு கேட்டது. அவர்கள் வெளியே ஓடி வந்து பார்த்தபோது ஷீபாவின் வீட்டு பின்புறத்தில் தீ கொழுந்துவிட்டு எரிவதை கண்டனர்.
உடனே அவர்கள் தக்கலை தீயணைப்பு நிலையத்திற்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். அங்கிருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். அதற்குள் இரணியல் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரன் மற்றும் போலீசாரும் அங்கு வந்தனர்.
அவர்கள் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு ஷீபாவும் அவரது 4 வயது மகள் அபர்ணாவும் தீயில் கருகி கரிக்கட்டையாக இறந்து கிடந்தனர். போலீசார் அவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அதன் பின்பு ஷீபா-அபர்ணா சாவுக்கு காரணம் என்ன? என்று விசாரித்தனர். அப்போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தது.
இளமையிலேயே ஷீபா மிக அழகாக இருப்பார். இதனால் அவரிடம் பேசவும் பழகவும் அப்பகுதி வாலிபர்கள் பலரும் விரும்பினர். இதில் உறவினர் ஒருவருடன் ஷீபாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. இது ஷீபாவின் தந்தைக்கு தெரிய வந்ததும் அவர் அதிர்ச்சி அடைந்தார். இதனால் அவர் தற்கொலையும் செய்து கொண்டார்.
அதன் பின்பு ஷீபா அவரது தாய் சிவக்குமாரி பராமரிப்பில் இருந்தார். அப்போதுதான் ஷீபாவுக்கும் செந்தில்குமார் என்பவருக்கும் திருமணம் நடந்தது. இருவரும் வாழ்க்கையை தொடங்கியதுமே செந்தில்குமாருக்கு ஷீபாவின் முந்தைய காதல் விவகாரம் தெரிய வந்தது. அதற்குள் இருவருக்கும் ஒரு மகன் பிறந்தான். என்றாலும் செந்தில்குமார் ஷீபாவை விவாகரத்து செய்து விட்டார்.
அதன் பின்பு மகனுடன் மீண்டும் தாய் வீட்டில் ஷீபா குடியேறினார். அப்போதுதான் அவருக்கு பக்கத்து வீட்டில் வசித்த அய்யப்பனுடன் பழக்கம் ஏற்பட்டது. இளமையில் தனிமையை அனுபவித்த ஷீபா அய்யப்பனை திருமணம் செய்ய விரும்பினார். இதையடுத்து அவர்களுக்கு ஷீபாவின் தாய் பதிவு திருமணம் செய்து வைத்தார்.
முதல் கணவர் மூலம் பிறந்த மகன், ஷீபாவின் தாயார் பராமரிப்பில் வளர்ந்தார். அதன் பின்பு ஷீபாவும் அய்யப்பனும் அதே பகுதியில் தனிக்குடித்தனம் சென்றனர். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த மறு ஆண்டே அய்யப்பனுக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்தது. எனவே அவர் மனைவி, மகளை பிரிந்து வெளிநாடு சென்றார். இதனால் ஷீபா மீண்டும் தனிமையில் தள்ளப்பட்டார்.
கணவன் இல்லாமல் தனியாக வசித்த ஷீபாவிடம் அக்கம் பக்கத்து வாலிபர்கள் அடிக்கடி பேசி வந்தனர். இதைப்பார்த்த சிலர் ஷீபாவையும், அந்த வாலிபர்களையும் தொடர்புபடுத்தி நடத்தையில் சந்தேகப்பட்டனர். இதுபற்றி ஷீபாவின் தாய் சிவக்குமாரியிடமும் புகார் கூறினர்.
ஏற்கனவே மகளால் பல பிரச்சினைகளை சந்தித்த சிவக்குமாரி மகளின் நடத்தையை ஊரார் குறைக்கூறியதால் நேற்று முன்தினம் மகளை சந்தித்து இதுபற்றி கேட்டார். அதன் பின்புதான் ஷீபா இந்த தற்கொலை முடிவை எடுத்துள்ளார் என்று தெரிய வந்தது.
ஷீபா தற்கொலை செய்வதற்கு முன்பு மகள் அபர்ணாவை விஷம் கொடுத்து கொன்றிருப்பதும் தெரிய வந்தது. அவரது வீட்டில் போலீசார் சோதனை செய்தபோது அங்கு விஷ மருந்துகள் இருந்ததை கண்டுபிடித்து கைப்பற்றி உள்ளனர். மேலும் ஷீபா எழுதி வைத்த கடிதம் ஒன்றையும் எடுத்தனர்.
அதில், ஷீபா தனது தற்கொலைக்கான காரணம் பற்றி பக்கம் பக்கமாக எழுதி உள்ளார். அதில், தனது நடத்தையில் ஊரார் சந்தேகப்பட்டதால் தற்கொலை முடிவை எடுத்ததாக கூறி உள்ளார். இந்த சம்பவம் குறித்து தக்கலை ஆர்.டி.ஓ. மோகன சந்திரன் விசாரணை நடத்தி வருகிறார்.
No comments:
Post a Comment