டீசல் விலை உயர்வு என்பது சரியான முன்னேற்றப் பாதையில் எடுத்து வைக்கப்பட்டுள்ள முதல் அடி என்றும், இதன் மூலம் இந்தியாவின் பொருளாதார நிலை முன்னேற்றம் காணும் என்றும் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
திட்டக் குழு ஆணையத்தின் 12வது ஐந்தாண்டு திட்டப் பணிகளுக்கு ஒப்புதல் அளித்து பிரதமர் மன்மோகன் சிங் கூறியதாவது:
11-வது ஐந்தாண்டு திட்ட முடிவில் நாம் குறிப்பிடத்தக்க சில இலக்குகளை அடைந்திருக்கிறோம். நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் ஆண்டு சராசரி என்பது 7.9 விழுக்காடாக இருகிறது. 11வது ஐந்தாண்டு திட்டத்தில் 2008 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் சர்வதேச பொருளாதார சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. 10-வது ஐந்தாண்டு திட்டத்தில் 2.4 விழுக்காடு வளர்ச்சியாக இருந்த வேளாண் துறையானது 11-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் 3.3 விழுக்காடாக உயர்ந்திருக்கிறது.
கடும் சவால்கள்
இது 11-வது ஐந்தாண்டுத் திட்டத்தின் நல்ல அம்சமாக இருந்தாலும் 12-வது ஐந்தாண்டுத் திட்டமானது கடுமையான சர்வதேச பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில்தான் தொடங்குகிறது.
இன்றைக்கு வலுவான வளர்ச்சி, செயலின்மை மற்றும் கொள்கை முட்டுக்கட்டைகள் என சிக்கலான மூன்று விஷயங்களில் நாட்டின் பொருளாதாரம் சிக்கிக் கொண்டுள்ளது. இந்த சவாலிலிருந்து நாம் வெளியில் வந்தாக வேண்டும்.
12-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் நாட்டின் வளர்ச்சி விகிதமானது 9 விழுக்காட்டுக்குப் பதிலாக 8.2 ஆக குறைத்திருக்கிறோம்.
உள்கட்டமைப்புக்கு ஒரு ட்ரில்லியன்
நாட்டின் உள்கட்டமைப்பு திட்டங்களை விரைவுபடுத்த வேண்டியது உடனடிப் பணிகளாகும். உள்கட்டமைப்புத் துறைகளின் முடக்கம்தான் இதர துறைகளின் வளர்ச்சியைப் பாதிக்கக் கூடியதாக இருக்கிறது. உள்கட்டமைப்புத் திட்டங்களை செயல்படுத்தும் போது முதலீட்டுக்கான சூழலும் அதிகரிக்கும். இந்தத் துறையில் டிரில்லியன் டாலர்களை முதலீடு செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறோம்.
12-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் முதலாவது 6வது மாத முடிவில் உள்கட்டமைப்பு அமைச்சகங்களின் செயல்திட்டங்களை நான் தனிப்பட்ட முறையில் ஆராய உள்ளேன். நாம் நிர்ணயித்திருக்கும் 8.2 விழுக்காடு இலக்கை எட்ட முதலீட்டுக்கான சூழலை உருவாக்க வேண்டும். வேளாண் துறை வளர்ச்சியை 4 விழுக்காடு அளவுக்கு உயர்த்த வேண்டும்.
டீசல் விலை உயர்வு சரிதான்
நமது நாட்டின் எரிபொருட்கள் விலையானது சர்வதேச விலைகளுக்கு அப்பால் இருக்கிறது. இதையடுத்து அண்மையில் டீசல் விலை உயர்த்தப்பட்டது என்பது ஒரு சரியான நடவடிக்கைதான். சரியான நேரத்தில் இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறோம். பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்ளாமல் முடக்கி வைத்தால் நாட்டின் வளர்ச்சி விகிதமானது 6 முதல் 6.5 விழுக்காடு என்பதைவிட மிகக் குறைவான விழுகாட்டை சந்திக்க நேரிடும்.
அன்னிய முதலீடு சரிதான்
12-வது ஐந்தாண்டுத் திட்டமானது 2.9 விழுக்காடு பற்றாக்குறையுடன் இருக்கிறது. இத்தகைய பற்றாக்குறை நிலைமையை சமாளிக்க நாம் நேரடி அன்னிய முதலீட்டை அனுமதித்தாக வேண்டிய நிலை இருக்கிறது. வெளிநாட்டு முதலீடுகளை நாம் ஈர்ப்பதன் மூலம் நிச்சயமாக நமது பற்றாக்குறை அளவு என்பது கட்டுப்பாட்டுக்குள் வௌவதுடன் கணிசமான பொருளாதார முன்னேற்றத்தையும் எட்ட முடியும்
நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தவே இந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இதனைப் புரிந்து கொண்டு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இல்லாவிட்டால், பொருளாதார வளர்ச்சி சதவீதத்துக்கு கீழே குறைந்துவிடும் வாய்ப்புள்ளது.
தொழிற்களம் உதவி ஆசிரியர் பணி
ReplyDelete