பிரதமர் மன்மோகன்சிங் தற்போதைய பாகிஸ்தானில் கடந்த 1932-ம் ஆண்டு செப்டம்பர் 26-ந் தேதி பிறந்தார். இந்தியாவுக்கு 1947 ஆகஸ்டு 15-ந் தேதி இங்கிலாந்து சுதந்திரம் அளித்தபோது, மன்மோகன்சிங்கின் குடும்பம் இந்தியாவுக்கு வந்தது. அவரது தந்தை ஒரு ஏழை வியாபாரி. 10 குழந்தைகளை பெற்றவர். ஏழைக்குடும்பத்தில் பிறந்தாலும் மன்மோகன்சிங் கல்வியால் உயர்ந்தார்.
இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர், இந்தியாவின் நிதி மந்திரி போன்ற பல உயர்ந்த பதவிகளை அலங்கரித்த மன்மோகன்சிங், கடந்த 2004-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத்தேர்தலை தொடர்ந்து சற்றும் எதிர்பாராத வகையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியால் பிரதமராக ஆக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து கடந்த 2009-ம் ஆண்டு நடந்த தேர்தலிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றதை தொடர்ந்து மன்மோகன்சிங் இரண்டாவது முறையாக பிரதமர் ஆனார். நேரு குடும்பத்தை சாராத ஒருவர் தொடர்ந்து இரண்டாவது முறையாக பிரதமர் பதவி ஏற்றது மன்மோகன்சிங் மட்டுமே.
கல்வியாலும், கடின உழைப்பாலும் உயர்ந்த பிரதமர் மன்மோகன்சிங் இன்று (புதன்கிழமை) தனது 80-வது பிறந்தநாளை குடும்பத்தினருடன் உற்சாகமாக கொண்டாடுகிறார். அவருக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மத்திய மந்திரிகள் நேரில் வாழ்த்து தெரிவிக்கிறார்கள். மன்மோகன்சிங்கின் 80-வது பிறந்தநாளையட்டி ரஷிய நாட்டின் ஜனாதிபதி விளாடிமிர் புதின் அவருக்கு வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார். அந்த வாழ்த்து செய்தியில் புதின் கூறி இருப்பதாவது:
உங்கள் பிறந்த நாளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். அன்புடன் ஏற்றுக்கொள்ளுங்கள். இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் நீங்கள் மரியாதைக்குரிய தலைவராகவும், ஆட்சி வல்லுனராகவும், பொருளாதார நிபுணராகவும் திகழ்கிறீர்கள். இந்திய பொருளாதார சீர்திருத்த சிற்பியாக நீங்கள் எடுத்த நடவடிக்கைகளால் நாட்டின் பொருளாதாரம் அபிவிருத்தி அடைந்திருக்கிறது. உங்கள் தனிப்பட்ட பங்களிப்பால் இந்திய, ரஷிய உறவுகள் மிகச்சிறப்பாக வளர்ச்சி கண்டுள்ளது.
இவ்வாறு அதில் புதின் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment