டீசல், எல்.பி.ஜி மற்றும் அந்நிய முதலீடு விவகாரத்தில் மத்திய அரசின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகித்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனது ஆதரவை விலக்கி கொண்டது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் இந்த விலகல் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி கூறியதாவது:-
இப்பிரச்சினை தொடர்பாக நாங்கள் மூன்று நாட்களாக ஒரு நல்ல முடிவு வரும் என்று எதிர்பார்த்தோம். ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருக்கவே விரும்பினோம். ஆனால் அவர்கள் எங்களை அங்கு இருக்க அனுமதிக்க வில்லை. ஆகையால் நாங்கள் அளித்து வந்த ஆதரவை விலக்கி கொள்கிறோம். அக்கூட்டணி அரசில் பதவி வகித்த எங்கள் உறுப்பினர்கள் வரும் வெள்ளியன்று பிரதமரை சந்தித்து பதவி விலகும் ராஜினாமா கடிதத்தை வழங்குவார்கள். இருப்பினும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியுடன் ஒரு நல்லிணக்க வாய்ப்பிற்காக மூன்று நாள் அவகாசத்தை அக்கட்சி கொடுத்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
மம்தாவின் விலகல் தொடர்பாக மற்ற கட்சிகள் பல்வேறு கருத்துகளை கூறியுள்ளன.
காங்கிரஸ் கட்சியின் கருத்து:-
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியானது ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் மதிப்பு மிக்க ஒரு கட்சியாகும். மம்தா பானர்ஜியால் எழுப்பப்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து அரசுடன் நாங்கள் ஆலோசனை நடத்துவோம். இந்த பிரச்சினையை கட்சியின் தலைவர் சோனியா காந்தி பிரதம மந்திரி மன்மோகன் சிங்குடன் கலந்து ஆலோசனை நடத்துவார்.
சமாஜ்வாடி கட்சி கருத்து:-
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் இந்த முடிவை தொடர்ந்து, சமாஜ்வாடி கட்சி இங்கு எந்த ஆதிக்காமும் செலுத்தாது. இவ்விசயத்தில் சுதந்திரமான ஒரு முடிவையே நாங்கள் எடுப்போம். அரசு கவிழக்கூடிய வாய்ப்புள்ள இந்த நிலையில் மிக முக்கியமான முடிவு எடுக்கபடவேண்டும். இதுகுறித்து முடிவெடுக்க கட்சியின் தலைவர் முலயாம் சிங் யாதவ் டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார்.
ராஷ்ட்ரிய லோக்தளம் கட்சி தலைவர் லல்லு பிரசாத் யாதவ் கருத்து:-
மம்தாவின் இந்த முடிவு ஒன்றும் புதிதானதல்ல. அவர் ஒவ்வொரு நிமிடமும் அவரது நிலையை மாற்றிக்கொண்டே இருப்பார். இந்த முடிவு குறித்து அவர் மீண்டும் முடிவெடுப்பார் என்று நான் நம்புகிறேன்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் விலகலால் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் கட்சியானது பாராளுமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிருபிக்க வேண்டிய கட்டாய நிலையில் உள்ளது. 545 உறுப்பினர்கள் உள்ள லோக்சபாவில் தனது பெரும்பான்மையை நிருபிக்க காங்கிரஸ் கட்சி 273 உறுப்பினர்களின் ஆதரவை காட்டவேண்டும். ஆனால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி விலகலால் 19 உறுப்பினர்கள் குறைந்துள்ளது.
ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு வெளியிலிருந்து ஆதரவு அளித்துவரும் 22 உறுப்பினர்களை கொண்டுள்ள சமாஜ்வாடி கட்சியினிடமோ அல்லது 21 உறுப்பினர்களை கொண்டுள்ள பகுஜன் சமாஜ் கட்சியினிடமோ தனது ஆதரவை கேட்க வேண்டி வரும்.
No comments:
Post a Comment