இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிரான சென்னை அமர்வு நீதிமன்றத்தின் பிடிவாரண்ட்டை ரத்து செய்யக் கூடாது என்று தமிழக அரசு கூறியுள்ளது.
1986ஆம் ஆண்டு நவம்பர் 1-ந் தேதி சென்னையில் தங்கியிருந்த டக்ளஸ் தேவானந்தா திருநாவுக்கரசு என்ற இளைஞரை சுட்டுக் கொன்றார். இந்த வழக்கில் டக்ளஸ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பின்னர் அவர் ஜாமீனில் வெளிவந்தார். கடந்த 1994-ம் ஆண்டு இந்த வழக்கில் டக்ளஸ் தேவானந்தா தேடபடும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். தற்ப்போது இலங்கை அமைச்சராக இருக்கும் டக்ளஸ், தம்மீதான பிடிவாராண்ட்டை ரத்து செய்ய கோரி சென்னை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இம்மனு மீது தமிழக அரசு பதில் மனுத்தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
நீதிபதி எஸ். ராஜகோபாலன் முன்னிலையில் நேற்று நடைபெற்ற விசாரணையின் போது தமிழக அரசு சார்பில் சென்னை மாநகர அரசு கூடுதல் குற்றவியல் வழக்குரைஞர் எம். பிரபாவதி பதில் மனு தாக்கல் செய்தார். அம்மனுவில், டக்ளஸ் தேவானந்தா மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இது பற்றி அவர் தனது மனுவில் குறிப்பிடவில்லை. அவர் இலங்கையின் அமைச்சர் என்ற சட்டபூர்வமான பொறுப்பில் உள்ளார். ஆகவே அவர் சட்டத்தை மதிக்க வேண்டும். தனது மீதான கொலைக் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கினை அவர் நீதிமன்றத்தில் சட்டப்படி சந்திக்க வேண்டும். மாறாக, தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள அவர், கடந்த பல ஆண்டுகளாக நீதிமன்ற விசாரணையில் பங்கேற்காமல் இருப்பது ஏன் என்பதற்கான சரியான காரணத்தை தனது மனுவில் கூறவில்லை. மேலும், இப்போது தன் மீதான பிடியாணையை திரும்பப் பெற வேண்டும் என்று கோருகிறார். ஆனால், அதற்கான சரியான காரணத்தை அவர் குறிப்பிடவில்லை. எனவே, அவரது மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அந்த பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணையை இம்மாதம் 20-ந் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
No comments:
Post a Comment