வெளியிலிருந்து ஆதரவு தருவோம், அமைச்சர்களை விலக்கிக் கொள்வோம் என்று பலமுறை மிரட்டி, பின்னர் அதே வேகத்தில் ஜகா வாங்கிய வரலாறு கொண்ட திமுகவுக்கு சரியான பாடம் கற்றுக் கொடுத்திருக்கிறார் திரினமூல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி. வெற்று மிரட்டலோடு நிற்காமல் உண்மையிலேயே கூட்டணியை விட்டு வெளியே போய் விட்டார். இதே பாணியில் இப்போதாவது திமுக செயல்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழகம் சம்பந்தப்பட்டதாக இருந்தாலும் சரி, தமிழகத்திற்கு வெளியே தமிழர்கள் சம்பந்தப்பட்டதாக இருந்தாலும் சரி திமுக வலுவான, ஆக்கப்பூர்வமான முறையில் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்து செயல்படவில்லை என்ற கருத்து தமிழக மக்கள் மத்தியில் நிலவுகிறது.
ஈழத்தில் போர் உச்சத்தில் இருந்தபோது, ஆயிரக்கணக்கான தமிழர்களை இலங்கைப் படைகள் கொடூரமாக கொன்று குவித்துக் கொண்டிருந்தபோது, திமுக உறுதியாகவும், உணர்வுப்பூர்வமாகவும் செயல்படாமல் மெத்தனமாக இருந்து விட்டதாக உலகத் தமிழர்கள் மத்தியில் இன்று வரை ஆதங்கம் இருந்து வருகிறது.
அதேபோல தமிழகம் சம்பந்தப்பட்ட பல பிரச்சினைகளிலும் கூட அரசியல் பார்வையுடனேயே திமுக செயல்படுவதாகவும் ஒரு கருத்து மக்களிடையே நிலவி வருகிறது.
அதுவே திமுக சம்பந்தப்பட்டதாக இருந்தால், திமுக குடும்பத்தார் சம்பந்தப்பட்டதாக இருந்தால் திமுக மத்திய அரசை மிக வேகமாக மிரட்டியதை மக்கள் பலமுறை பார்த்துள்ளனர்.
குறிப்பாக தேவைப்பட்ட அமைச்சர் பதவி கிடைக்காத கோபத்தில் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாட்டோம் என்று திமுக கூறியதை மக்கள் பார்த்தார்கள், வெளியிலிருந்து ஆதரவு தருவோம் என்று மிரட்டியதை மக்கள் பார்த்தார்கள், முக்கிய முடிவை எடுப்போம் என்று பலமுறை காங்கிரஸை மிரட்டியதை மக்கள் பார்த்தார்கள். ஆனால் இந்த மிரட்டல்கள் எல்லாம் படு வேகத்தில் வாபஸாகி விடுவதையும் மக்கள் பார்த்து வருகிறார்கள்.
ஆனால் திரினமூல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி நேற்று அதிரடியாக செயல்பட்ட விதம் திமுகவுக்கே ஒரு நல்ல பாடமாக அமைந்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். திமுகவும் இதேபோல மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்து செயல்படுமானால் நிச்சயம் ஏற்றப்பட்ட டீசல் விலை உள்ளிட்டவற்றை மத்திய அரசு நிச்சயம் மறு பரிசீலனை செய்யும் என்பது அவர்களது கருத்து.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் உள்ள முக்கியக் கட்சியான திமுக மக்கள் பிரச்சினைகளின்போது வெறும் அறிக்கையோடு நின்று விடுகிறது என்பதே பலரின் குற்றச்சாட்டுமாகும். ஆனால் தற்போது எதிர்பாராத வகையில் செப்டம்பர் 20ம் தேதி அழைப்பு விடுக்கப்பட்டுள்ள தேசிய பந்த்தில் கலந்து கொள்ளப் போவதாக திமுக அறிவித்துள்ளது. இது காங்கிரஸ் கட்சி வட்டாரத்தில் வியப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த திடீர் மாற்றம் தொடருமா, தேவைப்பட்டால் மமதா வழியில், கருணாநிதியும் செயல்படுவாரா என்ற புதிய எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
No comments:
Post a Comment