எனது 21 ஆண்டு கால அரசு பணிக்ககாலத்தில் 19 முறை இடமாற்றம் செய்யப்பட்டு இருக்கிறேன். என்னை எத்தனை முறை இடமாற்றம் செய்தாலும் ஒருபோதும் என் நேர்மையை மாற்ற முடியாது என்று கூறியுள்ளார் மதுரை மாவட்ட முன்னாள் கலெக்டர் சகாயம்.
சென்னையில் நடந்த, 5வது தூண் அமைப்பின் தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு புத்தகமான, மக்களாகிய நாம் வெளியீடு சென்னையில் நடந்தது. இதில் சகாயம் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார். தேமுதிக எம்.எல்.ஏ. மாபோ பாண்டியராஜன் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் சகாயம் பேசியதாவது...
நமது தேசம் எப்படிப்பட்ட தேசமாக இருந்தது. இன்று லஞ்சமும், ஊழலும் எங்கும் வியாபித்து உள்ளன. நாட்டின் முன்னேற்றத்திற்கு அவை பெரும் தடைகளாக இருக்கின்றன. ஏழைகளிடம் இரக்கம் காட்டலாம். ஆனால், தவறு செய்தவர்கள் மீது இரக்கம் காட்டவே கூடாது. தவறு செய்தவர்கள் மீது நான் கடும் நடவடிக்கை எடுத்துள்ளேன். தவறு செய்த யாரையும் விட்டுவிட மாட்டேன்.
நமது தேசம் சுதந்திரம் அடைந்து 60 ஆண்டு காலம் ஆகிவிட்டது. மாற்றம் வந்தாக வேண்டும். அந்த மாற்றத்தை உருவாக்கக்கூடிய சக்தி மாணவ-மாணவிகளிடமும், இளைஞர்களிடமும் இருக்கிறது. லஞ்ச, ஊழலை ஒழிக்க விரும்பும் எல்லோரும் ஒன்று சேர்ந்தால் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். நாட்டின் முன்னேற்றத்திற்கும், வளர்ச்சிக்கும் தடைகளாக இருக்கும் லஞ்சத்தையும், ஊழலையும் ஒழிப்பதற்கு 2-வது சுதந்திர போராட்டத்திற்கு நாம் எல்லோரும் தயாராவோம்.
இந்தியாவிலேயே சொத்துக்கணக்கை பகிரங்கமாக இணையதளத்தில் வெளியிட்ட முதல் ஐ.ஏ.எஸ். அதிகாரி நான்தான். எனது 21 ஆண்டு கால அரசு பணிக்ககாலத்தில் 19 முறை இடமாற்றம் செய்யப்பட்டு இருக்கிறேன். என்னை எத்தனை முறை இடமாற்றம் செய்தாலும் ஒருபோதும் என் நேர்மையை மாற்ற முடியாது என்றார் அவர்.
இந்த நிகழ்ச்சியில் நடிகை அமலா பால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment