கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் கூத்தங்குழியில் உள்ள பாதிரியார் பங்களாவில் நிருபர்களுக்கு இன்று பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கேரள மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரி அச்சுதானந்தன் இடிந்தகரைக்கு இன்று வருவதாக இருந்தது. ஆனால் அவரை தமிழக காவல்துறையினர் களியக்காவிளையில் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி விட்டனர். இது கண்டிக்கதக்கது. இடிந்தகரை மக்களுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக அச்சுதானந்தன் மீண்டும் வரவேண்டும்.
நம்நாட்டில் உள்ள அனைவரும் இந்தியா முழுவதும் செல்லவும், சுற்றித் திரியவும் அனுமதி உள்ளது. ஆனால் எங்களை பார்க்க வருபவர்களை போலீசார் தடுத்து நிறுத்துகிறார்கள். அப்படி தடுத்து நிறுத்தக்கூடாது. கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான போராட்டம் தமிழகத்தில் மட்டுமல்ல. கேரளாவிலும் நடக்கிறது. கேரளாவில் இருந்து கிறிஸ்தவ அமைப்பு தலைவர்கள் இடிந்தகரைக்கு வர இருக்கிறார்கள்.
கடந்த 10-ந்தேதி நடந்த கலவரத்தின்போது போலீசாரின் ஒரு துப்பாக்கி தொலைந்துவிட்டதாகவும், அது இடிந்தகரையில் யாரோ எடுத்து வைத்திருப்பதாகவும் புரளியை கிளப்பி இடிந்தகரைக்குள் மீண்டும் வர போலீசார் திட்டம் தீட்டியுள்ளனர். அந்த கலவரத்தின்போது, இந்திய எல்லையில் பயன்படுத்த கூடிய கண்ணீர் புகை குண்டுகளை காவல் துறையினர் வீசி உள்ளது வருத்தத்துக்குரியது.
அவை காலாவதியான கண்ணீர் புகை குண்டுகள். இதனால் எனக்கு, முகிலன், புஷ்பராயன் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட ஏராளமானவர்களுக்கு தோல் உறிந்துவிட்டது. எங்களது படகு, மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பொருட்களை போலீசாரே சேதப்படுத்திவிட்டு எங்களின் மீது குற்றம் கூறுவதை வன்மையாக கண்டிக்கிறோம்.
எங்களின் கோரிக்கைக்கு தமிழக அரசு இதுவரை செவி சாய்க்காமல், கருத்து கூறாமல் இருப்பதால் மீண்டும் முற்றுகை போராட்டம் நடத்த வேண்டும் என எங்களின் சமூக தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக மற்றொரு முறை நாளை திட்டமிடுதல் கூட்டம் நடத்துகிறார்கள். அதில் மீண்டும் முற்றுகை போராட்டம் நடத்துவது குறித்து இறுதி முடிவு எடுத்து அறிவிக்கிறார்கள். இதற்கு போராட்டக்காரர்களாகிய நாங்கள் இணக்கம் தெரிவித்துள்ளோம்.
தமிழக அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும். முதல்வர் ஜெயலலிதா இனியாவது எங்களுக்காக பேசவேண்டும். அவர் எப்போது அழைத்தாலும் நாங்கள் பேச தயாராக இருக்கிறோம். எங்களுக்கு ஆதரவாக 13 மீனவ கிராம மாவட்டங்கள் தீவிரமாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நீதிமன்றங்களை நான் மதிக்கிறேன். தற்போது இங்குள்ள நிலையில் போராட்டத்தில் நான் இருக்க வேண்டியது கட்டாயமாக உள்ளது. ஆகவேதான் நான் கோர்ட்டில் ஆஜராக செல்லவில்லை. எனது சார்பாக என்னுடைய மனைவி சென்றிருக்கிறார்.
இவ்வாறு உதயகுமார் கூறினார்.
No comments:
Post a Comment