நடிகர் ஷாருக்கானை போல சல்மான் கானும் ஐபிஎல் குழுவில் உள்ள ஒரு கிரிக்கெட் அணியை வாங்க போவதாக பரவிய செய்தியை சல்மான் கான் மறுத்துள்ளார்.
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் ஐபிஎல் தொடர் பிரபலமானது. இதில் பங்கேற்கும் ஒவ்வொரு அணியும், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்களின் கலவையை கொண்டிருக்கும்.
இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையை பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் பெற்றுள்ளார். கடந்த மே மாதம் முடிவடைந்த 5வது ஐபிஎல் தொடரில் இந்திய துவக்க வீரர் கம்பிரின் தலைமையில் செயல்பட்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கோப்பையை வென்றது.
இந்த நிலையில் கடந்த ஐபிஎல் தொடரில் களமிறங்கிய டெக்கான் சார்ஜர்ஸ் அணி படுதோல்வி அடைந்தது. மேலும் அந்த அணி நிர்வாகத்தின் பொருளாதார நெருக்கடி காரணமாக வீரர்களுக்கு சம்பள பாக்கியை வைத்தது. இதனால் டெக்கான் சார்ஜர்ஸ் அணியை விற்பனை செய்யும் அறிவிப்பு வெளியானது.
டெக்கான் சார்ஜர்ஸ் அணியை பல தொழிலதிபர்களும் வாங்க முயன்று வருவதாக தகவல்கள் வெளியானது. மேலும் ஷாருக்கானை போல, பாலிவுட் நடிகர் சல்மான் கானும் ஒரு ஐபிஎல் அணியை வாங்க நினைப்பதாகவும், அவர் டெக்கான் சார்ஜர்ஸ் அணியை வாங்க வாய்ப்புள்ளது என்றும் செய்திகள் பரவின.
ஆனால் இந்த செய்தியை மறுத்துள்ள சல்மான் கான், தனக்கு ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் அணியை வாங்கும் திட்டம் எதுவும் இல்லை என்றும், தற்போதைக்கு சினிமா மற்றும் ஹியூமன் பியிங் விற்பனை மையத்திலும் அதிக கவனம் செலுத்தி வருவதாகவும், அவரது டுவிட்டர் இணையதளத்தில் தெரிவித்துள்ளார்.
இதனால் நடிகர் ஷாருக்கானின் காலடிகளை பின்பற்றி ஐபிஎல் அணியை வாங்க சல்மான் கான் முடிவு செய்துள்ளதாக எழுந்த வதந்திக்கு சல்மான் கான் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
No comments:
Post a Comment