Tuesday, October 21, 2014

ஜெயலலிதாவுக்கு ரஜினி வாழ்த்து ஏன்?

நடிகர் ரஜினியை தங்கள் பக்கம் இழுக்க பாஜக தரப்பில் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாஜக தலைவர்கள் பலரும் அவருக்கு பகிரங்கமாகவே அழைப்பு விடுத்து வருகின்றனர். இந்த முறை ரஜினி நிச்சயம் அரசியலுக்கு வரப்போகிறார் என்று தகவல்கள் கசிந்துகொண்டிருக்கும் நிலையில், ரஜினியோ ஜாமீனில் விடுதலையாகி வந்துள்ள ஜெயலலிதாவுக்கு திடீரென வாழ்த்து கடிதம் எழுதி தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளார். ஜெயலலிதாவுக்கு ரஜினி வாழ்த்து சொன்னதின் பின்னணி குறித்து பல தகவல்கள் வருகின்றன.

இதுகுறித்து அரசியல் விமர்சகர்கள் தெரிவித்ததாவது:

தனது ‘லிங்கா படம் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் வெளிவர வேண்டும் என்று ரஜினி விரும்புகிறார். கமலின் ‘விஸ்வரூபம், விஜயின் ‘துப்பாக்கி, ‘தலைவா, ‘கத்தி உள்ளிட்ட படங்கள் சந்தித்ததுபோல ‘லிங்கா படம் பிரச் சினையில் சிக்கிவிடக் கூடாது என்பதில் ரஜினி கவனமாக இருக்கிறார்.

குறிப்பாக, பாஜக தற்போது அதிமுகவுக்கு எதிராக பகிரங்கமாக களம் இறங்கியுள்ளது. பரஸ்பரம் இரு கட்சிகளும் கடுமையாக விமர்சித்து வருகின்றன. அதேநேரத்தில் பாஜகவுடன் ரஜினி நெருக்கமாக இருப்பதாகவும், அரசியலுக்கு வரப்போவதாகவும் செய்திகள் கிளம்புகின்றன.

இதனால், ஆளும்கட்சியினர் ‘லிங்காவுக்கு பிரச்சினை கிளப்பலாம் என்று சிலர் ரஜினிக்கு ஆலோசனை கூறியுள்ளனர். மேலும், ஜெயலலிதாவுக்காக திரையுலகினர் உண்ணாவிரதம் இருந்தபோது, அதில் ரஜினி கலந்துகொள்ளவில்லை. இதுவும் அதிமுக தரப்பில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதையெல்லாம் சமாளிக்கவே இப்போது ஜெயலலிதாவுக்கு ரஜினி வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதியிருக்கிறார்.

தமிழகத்தில் சுமார் 35 சதவீத ஓட்டு வங்கி கொண்ட அதிமுகவில் பலரும் ரஜினி ரசிகர்கள். அவர்களை பகைத்துக்கொண்டு வியாபாரத்தை இழக்க ரஜினி விரும்பவில்லை. ‘லிங்கா படம் முடிந்ததும் அரசியல் அறிவிப்பை ரஜினி வெளியிடக்கூடும் என தகவல்கள் வருகின்றன. அப்படி அவசரப்பட்டு எந்த அறிவிப்பையும் வெளியிட வேண்டாம் என்று அவருக்கு சிலர் ஆலோசனை சொல்லியுள்ளனர்.

ஒருவேளை இப்போது ‘லிங்கா படம் வெளியாவதில் ஆளும்கட்சி சிக்கல் ஏற்படுத்தினால் அப்போது பாஜக உங்களுக்கு கை கொடுக்கும். அப்படி கைகொடுத்து உதவினால், நட்புக்காக அவர்கள் சொல்வதை எல்லாம் நீங்கள் கேட்க வேண்டிய தர்மசங்கடமான சூழல் ஏற்படும். புதிய கட்சியை தொடங்கினாலோ அல்லது பாஜகவில் இணைந்தாலோ உங்களால் பெரிய அளவில் டிமாண்ட் எதுவும் வைக்க முடியாது.

சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னம் 20 மாதங்கள் இருக்கின்றன. இப்போதே அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை வெளியிட்டால் ஆளும்கட்சி செய்யும் கெடுபிடிகளை தாக்குப்பிடிக்க முடியாது. 20 மாதங்களில் கட்சியை கலகலக்க செய்துவிடுவார்கள். அதனால்தான் விஜயகாந்த்கூட 2006-ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு எட்டு மாதங்களுக்கு முன்னதாக 2005 செப்டம் பரில்தான் அரசியலுக்கு வந்தார். ஆந்திரத்தில் நடிகர் சிரஞ்சீவியும் நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவை தேர்தலுக்கு 8 மாதங்களுக்கு முன்புதான் கட்சியை தொடங்கினார். எனவே, அடுத்த ஆண்டு அக்டோபரில் அரசியல் குறித்து முடிவை எடுக்கலாம். அதுவரை இந்த அரசியல் பரபரப்பை படத்தின் பிரமோஷனுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று ரஜினியிடம் கூறியுள்ளனர். இதை ரஜினியும் கவனத்துடன் கேட்டுக்கொண்டார். இதன் பின்னணியில்தான் ஜாமீனில் விடுதலையாகி வந்துள்ள ஜெய லலிதாவுக்கு ரஜினி திடீரென கடிதம் எழுதியிருக்கிறார்.


இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


No comments:

Post a Comment