Wednesday, October 15, 2014

சென்னையை கலக்கிய ஷாருக்கான்

‘பேஷன் ஷோ என்றதும் அழகு பெண்களின் அணிவகுப்புதான் நினைவுக்கு வரும். அன்னநடை போட்டு நடந்து வரும் பாவைகள் காட்டும் பாவனைகளுக்கு எழும் ஆரவாரம் அரங்கை அதிர செய்யும். அப்படியிருக்கையில் பார்வையாளர்களை குஷிப்படுத்தும் வகையில் பாலிவுட் நட்சத்திரங்கள் பேஷன்ஷோவில் தோன்றினால்... அரங்கமே ஆர்ப்பரிப்பில் அதிர்ந்து விடாதா? அப்படியொரு ஆரவார அழகுத் திருவிழா சென்னையில் அரங்கேறியது.

 மங்கையர்களின் மனம் கவரும் பட்டுப்புடவைகள் பேஷன் ஷோவில் பிரதானமாக இடம் பெற்று இருந்ததால் பெண்களிடத்தில் உற்சாகம் கரைபுரண்டது. பத்து மாடல் அழகிகள் அலங்கார பட்டுப் புடவைகளில் வந்ததை பார்த்து பரவசத்தில் ஆழ்ந்தனர். அவர்களை பாலிவுட் நட்சத்திரங்களான ஷாருக்கான், தீபிகா படுகோனே, அபிஷேக் பச்சன் மற்றும் பொம்மன் இரானி, சோனு சூட், விவான் ஷா போன்ற ‘ஹேப்பி நியூ இயர் இந்திப்பட குழு குதூகலப்படுத்தியது.

 பேஷன்ஷோவில் 4 சுற்றுகள் நடந்தேறின. ஒவ்வொரு சுற்றிலும் 10 வண்ண பட்டுப் புடவைகளின் டிசைன்கள் காட்சிப்படுத்தப்பட்டன. முதல் சுற்றில் ‘கேசுவல் சாரீஸ் இடம்பெறுவதாக திரையில் அறிவிப்பு தோன்றியவுடனேயே பெண்கள் தங்கள் கையில் இருந்த ஸ்மார்ட் போன்களில் அதை படம்பிடிக்க தயாரானார்கள்.

அடுத்த சில நொடிகளில் மாடல் அழகிகள் விதவிதமான டிசைன்கள், வெவ்வேறு நிறங்கள் கலந்த புடவைகளில் தோன்றினார்கள். அங்கும், இங்கும் அசைந்தாடியபடி ஒய்யார நடைபோட்ட அம்மாடல் அழகிகளின் அணிவகுப்புக்கு அடுத்தடுத்து இடம்பெற்ற ‘கான்செப்ட், டிசைனர் சாரீஸ் சுற்றுகளில் எதிர்பார்ப்பு கூடியது.

கான்செப்ட் பட்டுப்புடவைகள் ஜரிகைகள் இல்லாமல் தயாரிக்கப்பட்டிருந்தது சிறப்பம்சம். முந்தானையில் மட்டுமே ஜரிகைகள் இடம்பெற்று அழகுற மிளிர்ந்தது. ‘டிசைனர் பட்டுகள் கலை வேலைப்பாடுகளுடன் ஜொலித்தது. ஆபரண பட்டுப்புடவை இடுப்பில் ஆபரணங்கள் அணிந்ததுபோல் டிசைன் செய்யப்பட்டிருந்தது.
ஒவ்வொரு பட்டுப்புடவையும் ஒவ்வொரு டிசைனில் ஜொலித்தது என்றால் அதை மாடல்கள் அணிந்திருந்த நேர்த்தி அழகுக்கு அழகு சேர்த்தது. அவர்கள் உடுத்தியிருந்த பாணியும் மாறுபட்டிருந்தது.

ஷாருக்கான் பட தலைப்பை மையப்படுத்திய ‘ஹேப்பி நியூ இயர் பிரைடல் கலெக்ஷன் சுற்றில் மாடல்கள் உடுத்தி வந்த பட்டுப்புடவைகளுக்கு ஏக வரவேற்பு கிடைத்தது. ஒரு மாடல் அழகி புடவையையும், ஜாக்கெட்டையும் சரி பாதியாக அழகுற உடுத்தி வந்து காண்போரை கவர்ந்தார். ஜாக்கெட் நுணுக்கமான கலை வேலைப்பாடுகளில் மின்னியது. இடுப்புக்கு கீழே உடுத்திருந்த புடவையும் புது டிசைனை அறிமுகப்படுத்தியது. சேலை ரகங்களில் புகுந்திருக்கும் புதுமைகள் பேஷன்ஷோவை பிரமிக்க வைத்தன. அதற்கு மகுடம் சூட்டுவதுபோல் மாடல் அழகிகளின் அலங்காரம் அமைந்திருந்தது.

 விழாவில் சேலை வடிவமைப்பில் உலக சாதனை படைத்ததற்காக செல்வன்கார்த்திக் ஆகியோருக்கு நல்லி குப்புசாமிசெட்டியார்  விருது வழங்கினார். சாதனை படைத்த இந்த சேலையை கம்ப்யூட்டரில் டிசைன் செய்து தறியில் உருவாக்க 400 நாட்கள் ஆகியிருப்பதாக சொன்னார்கள். டிசைன்களை உருவாக்க இரண்டு லட்சம் ‘பஞ்ச் கார்டுகள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. சூரியோதயத்தில் காலையில் தெரியும் வானம் படிப்படியாக மாலைக்குள் எப்படியெல்லாம் மாற்றங்களை எதிர்கொள்கிறது என்பதை மையப்படுத்தி இந்த சேலை உருவாக்கப்பட்டிருந்தது. உலக புகழ்பெற்ற இந்த சேலை வடிவமைப்பிற்காக தந்தை செல்வம்மகன் கார்த்திக் ஆகியோருக்கு டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. கார்த்திக் ஆஸ்திரேலியாவில் எம்.பி.ஏ. படித்துவிட்டு இந்த துறைக்குள் நுழைந்திருக்கிறார்.

விழாவில் பேசிய பேஷன் டிசைனர் ஜெயஸ்ரீ ரவி, ‘‘புடவையில் ஓரிடத்தில் இடம்பெறும் டிசைன் மீண்டும் ஏதாவது ஒரு மூலையில் இடம்பெற்று விடும். ஆனால் இவர்கள் வடிவமைத்திருக்கும் சேலையில் ஒரு டிசைன் கூட மீண்டும் இடம்பெறவில்லை. எல்லாமே வெவ்வேறு டிசைனாக இருக்கிறது. அது பார்ப்பதற்கு அழகாக தெரிகிறது. உலக அளவில் சாதனையும் படைத்திருப்பது பெருமைக்குரிய விஷயம்’’ என்றார்.
இப்படி விதவிதமான பட்டுப் புடவை டிசைன் களை ரசித்து பார்த்து கொண்டிருந்தவர்களை ஷாருக்கான், தீபிகா படுகோனே, அபி ஷேக் பச்சன் மற்றும் பொம்மன் இரானி, சோனு சூட், விவான் ஷா பிரவேசம் மேலும் குஷிப்படுத்தியது. அப்போது அவர்கள் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாக இருக்கும் ‘ஹேப்பி நியூ இயர் பட பாடல் ஒலிக்க அரங்கமே இசையொலியில் அதிர்ந்தது. அதற்கு இணையாக பார்வையாளர்களின் கரவொலி எதிரொலிக்க ஆரவாரம் அதிகமானது. ஷாருக்கானின் பேச்சு மட்டுமல்ல அவருடைய செயல்களும் பார்வையாளர்களை கவர்ந்திழுத்தது. சக நடிகர், நடிகையை சகட்டு மேனிக்கு கிண்டல் செய்தார். மேடையில் அவர்களை தண்டால் எடுக்கவும் வைத்தார்.

 ‘‘தென் இந்தியாவில் பெண்களை கவரும் விதவிதமான பட்டு புடவைகளை டிசைன் செய்து அசத்துகிறீர்கள். அதுமாதிரி ஆண்களுக்கும் டிசைன்கள் செய்துதர வேண்டும். எங்களுக்கும் சட்டை, பேண்ட், கோட் எல்லாம் பட்டில் போட ஆசை’’ என்று கோரிக்கை விடுத்த ஷாருக்கான், மாடல் அழகிகளுடன் ஜோடியாக உலா வந்து பேஷன் ஷோவை அமர்க்களப்படுத்தினார். அவர் பேஷன் அழகிகளை போலவே இடுப்பில் கையை வைத்து நடந்த காட்சியை  பார்த்து பெண்கள் குதூகலித்தனர். படம் பிடித்துக் கொண்டே இருந்தனர்.

வெளிர் பொன்னிற சேலை அணிந்து வந்திருந்த தீபிகா படுகோனே மேடையில் அழகு நடை நடந்தபோது ஆரவாரம் அதிகரித்தது. குழந்தைகள் விசில் அடித்து அவரை உற்சாகப்படுத்தினார்கள். தீபிகா பேசும்போது, ‘‘சென்னை மக்களின் அன்பும், கனிவும் என்னை அதிகம் கவர்கிறது. என்னுடைய சிறுவயதில் கொஞ்சகாலம் சென்னையில் வசித்ததை நினைவு கூர்கிறேன். கடந்த ஆண்டு நடைபெற்ற சென்னை எக்ஸ்பிரஸ் விழாவை அடுத்து மீண்டும் சென்னைக்கு வந்திருப்பதை பெருமையாக கருதுகிறேன்’’ என்றார்.

அபிஷேக் பச்சன், ‘வணக்கம் சென்னை, ‘ஹாய் மச்சான் என்று சென்னை தமிழ் பேசி அரங்கத்தில் இருந்தவர்களை தன்வசம் ஈர்த்தார். சோனு சூட், விவான் ஷா இருவரும் தரையில் கையை ஊன்றி ‘தண்டால் எடுத்து அசத்தினர். அப்போது அவர்கள் செய்த குறும்புகள் அரங்கத்தை சிரிப்பொலியில் ஆழ்த்தியது. சோனு சூட் பிரபல தெலுங்கு பட வில்லன். பொம்மன் இரானி ‘திரி இடியட்ஸ் படத்தில் கல்லூரி முதல்வராக நடித்த பிரபலம். இந்த விழாவை பாலம் சில்க்ஸ் ஜெயஸ்ரீ ரவி ஒருங்கிணைத்திருந்தார். சுனிதா, வினிதா, நிதின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் ‘ஹேப்பி நியூ இயர் படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது. அதில் தமிழாக்கமும் இடம்பெற்று இருந்தது அரங்கத்தில் இருந்தவர்களின் ஆரவாரத்தை அதிகரிக்க செய்தது. அந்த படத்தில் இடம்பெறும் ‘இந்தியா வாலே என்ற பாடலுக்கு புடவை கட்டி நடனமாடும் வகையில் ஏற்கனவே போட்டி நடத்தப்பட்டிருந்தது. அதில் சிறப்பாக ஆடிய ஐந்து  பேர் ஷாருக்கான் முன்பு அதே பாடலுக்கு மீண்டும் நடனமாடினார்கள். அப்போது படத்தின் பாடல் காட்சியை போலவே ஐந்து பேரும் நடன அசைவை வெளிப்படுத்தியதை பார்த்து ஷாருக்கான், தீபிகா, அபிஷேக் உள்ளிட்ட படக்குழுவினர் ஆச்சரியப்பட்டனர். மேடைக்கு அருகில் இருந்த இருக்கையில் இருந்தவாறே பாடலை பாடியபடி மேடையில் நடனம் ஆடியவர்களை உற்சாகப்படுத்தினார்கள். அதை பார்த்து அரங்கத்தில் இருந்தவர்களும் ஆர்ப்பரித்தனர். இதனால் அரங்கே ஆரவாரத்தில் அதிர்ந்தது.

சிறப்பாக நடனமாடியவரை தீபிகா படுகோனே தேர்வு செய்தார். அப்போது அவர் யாரை தேர்ந்தெடுக்கலாம் என்று அரங்கத்தில் இருந்தவர்களிடம் கருத்து கேட்டார். பெரும்பாலானோர் ரக்ஷன் என்பவர் பெயரை பரிந்துரைத்தனர். இறுதியில் தீபிகாவும் ரக்ஷனே தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக அறிவித்து, அவருக்கு பரிசு வழங்கினார். அப்போது மேடையில் மீண்டும் ‘இந்தியா வாலே பாடல் ஒலிக்க ஷாருக்கான், தீபிகா உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் நடனம் ஆடினார்கள். அதை பார்த்து இருக்கையில் இருந்தவர்கள் எழுந்து நின்று ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.


இந்த படக்குழுவினர் சென்னையில் 14 மணி நேரத்தை செலவிட்டனர். அமெரிக்காவில் இருந்து நேரடியாக சென்னை வந்து விழாவில் கலந்து கொண்ட ஷாருக்கான் குழுவினர் அன்று இரவு தூங்காமல் அதிகாலையில் லண்டன் புறப்பட்டு சென்றனர்.


No comments:

Post a Comment