தி.மு.க- காங்கிரஸ் கூட்டணி உறுதியாகி விட்டது. தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த தி.மு.க. சார்பிலும், காங்கிரஸ் சார்பிலும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தி.மு.க. குழுவில் மு.க. ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், பொன்முடி, டி.ஆர். பாலு ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
காங்கிரஸ் குழுவில் ப. சிதம்பரம், ஜெயந்தி நடராஜன், ஜி.கே. வாசன், தங்கபாலு, ஜெயக்குமார் எம்.எல்.ஏ. உள்ளனர்.
தி.மு.க- காங்கிரஸ் தொகுதி பங்கீடு பற்றிய பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. தமிழக சட்டசபை கூட்டம் 10-ந்தேதி (வியாழக்கிழமை) முடிவடைகிறது. அதன் பிறகு பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே, வருகிற வெள்ளிக்கிழமை அல்லது சனிக்கிழமை பேச்சுவார்த்தை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 21-ந்தேதி தொடங்குகிறது. அதற்கு முன்பு தி.மு.க- காங்கிரஸ் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிவடைந்து விடும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காங்கிரஸ் கடந்த சட்டசபை தேர்தலைவிட தற்போது கூடுதல் இடங்களில் போட்டியிட விரும்புவதாக தெரிகிறது. தி.மு.க.வும் கூடுதல் தொகுதிகளில் நிற்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. அதற்கு ஏற்ப பேச்சுவார்த்தை அமையும் என்று சொல்லப்படுகிறது.
தற்போது தி.மு.க- காங்கிரஸ் கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக் கட்சிகள் உள்ளன. இந்த கட்சிகளுடனும் தி.மு.க. பேச்சுவார்த்தை நடத்துகிறது. பேச்சுவார்த்தை முடிந்த பிறகு தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு எத்தனை இடங்கள் என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
பா.ம.க. யாருடன் கூட்டணி என்பதை இன்னும் அறிவிக்கவில்லை.

No comments:
Post a Comment