ஜெயலலிதாவை டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரன் மீண்டும் சந்தித்து பேசினார். நடிகர் விஜய்யின் தந்தையும், சினிமா டைரக்டருமான எஸ்.ஏ.சந்திரசேகரன் நேற்று மாலை போயஸ்கார்டனில் உள்ள அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வீட்டுக்கு சென்றார். அங்கு ஜெயலலிதாவை அவர் சந்தித்து பேசினார். ஏற்கனவே ஒருமுறை சந்தித்தார். இந்த சந்திப்பு இரண்டாவது தடவை நடந்தது. 45 நிமிடம் அவர்கள் பேசினர்.
தேர்தலையொட்டி இச்சந்திப்பு நடந்துள்ளதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. விஜய் அரசியலில் ஈடுபட முடிவு செய்துள்ளார். ரசிகர்களை சமீபத்தில் சென்னைக்கு அழைத்து கருத்து கேட்டார். அப்போது அனைவரும் அரசியலில் ஈடுபடும்படி வற்புறுத்தினர்.
திருச்சியில் மாநாடு நடத்தி புதுகட்சி அறிவிப்பை வெளியிடலாம் என்றும் ஆலோசனை கூறப்பட்டது. ஆனால் உடனடியாக கட்சி துவங்க விஜய்க்கு ஆர்வம் இல்லை என கூறப்படுகிறது. அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவார் என பேச்சு அடிபடுகிறது. ஜெயலலிதா, எஸ்.ஏ.சந்திர சேகரன் சந்திப்பில் இதுபற்றி ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.
“காவலன்” படம் ரிலீசுக்கு பல்வேறு தடைகள் ஏற்பட்டது. இது விஜய்யை ஆத்திர மூட்டியுள்ளது. எனவே அவர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவது உறுதி என கூறப்படுகிறது. “வேலாயுதம்”, “நண்பன்” படங்களில் தற்போது நடித்து வருகிறார். தேர்தலுக்கு முன் இவ்விரு படங்களையும் முடித்து விட திட்டமிட்டுள்ளார். ரசிகர் மன்றங்களை சில மாதங்களுக்கு முன் மக்கள் இயக்கமாக மாற்றினார்.
கிராமங்கள் தோறும் அந்த இயக்கம் சார்பில் சமூக சேவை பணிகள் நடந்து வருகின்றன. ஜெயலலிதா விஜய் படங்களுடன் ரசிகர்கள் முக்கிய பகுதிகளில் பேனர்கள் கட்டி வருகிறார்கள். போஸ்டர்களும் ஒட்டி வருகின்றனர். அவர்கள் இப்போது அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக தேர்தல் பணியில் இறங்கி விட்டனர். தனது அரசியல் முடிவை விஜய் ஒருசில தினங்களில் அறிவிப்பாக வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:
Post a Comment