தாம்பரம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் டி.கே.எம்.சின்னையாவை ஆதரித்து தாம்பரம் மார்க்கெட் பகுதியில் நடிகர் சிங்கமுத்து பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர், ‘’தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணி ஆட்சி அமைக்க தமிழக மக்கள் அமோக ஆதரவு அளித்து வருகிறார்கள். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா செல்லும் இடங்களிலெல்லாம் அலைபோல பொதுமக்கள் ஆதரவு தெரிவித்து குவிகிறார்கள்.
தி.மு.க. ஆட்சியில் விலைவாசி உயர்வு, சட்டம்-ஒழுங்கு சீர்கேடு ஏற்பட்டுள்ளது. தி.மு.க.வினர் சொன்னதையும் செய்தோம். சொல்லாததையும் செய்தோம் என்கிறார்கள். ஊழல் செய்வோம் என்று சொல்லாமல் செய்ததைத்தான் இப்படி சொல்கிறார்கள்.
ஒரு ஊரில் வெள்ளம் வந்தபோது அங்கு இருந்த பீரோ, கட்டில் என பல பொருட்கள் வெள்ளநீரில் அடித்து வரப்பட்டன.
அந்த பொருட்களை எடுக்க ஊரார் திரண்டபோது ஒருவன் மட்டும் பெரிதாக எதிர்பார்க்கிறேன் எனக்கூறி விட்டான்.
அப்போது பெரிதாக கறுப்புநிறத்தில் ஒன்று வந்தது. அவன் அதை பிடித்துக்கொண்டான். அதை பிடித்தபடியே 3 ஊரை தாண்டி சென்று விட்டான்.
அப்போது ஊர்க்காரர்கள், அவனைப் பார்த்து, நீ பிடித்ததை இழுத்து வர முடியவில்லை என்றால், அதை விட்டுவிட்டு கரைக்கு வந்து சேர் என்று கூறினார்கள். கரடியை பிடித்த போது அதன்பிடியில் சிக்கிக்கொண்ட நிலை தான் வடிவேலுக்கு.
வடிவேலுவுக்கு என்ன அரசியல் தெரியும். நான் 1972-ல் இருந்து அ.தி.மு.க. உறுப்பினர். ஆனால் அவர் எந்த கட்சியிலும் உறுப்பினர் இல்லை என்கிறார். பொருளாதார மேதை மாதிரி பேசிக்கொண்டிருக்கிறார். விஜயகாந்தை பற்றி பேச வடிவேலுவுக்கு தகுதி இல்லை.
தமிழகத்தில் சினிமா துறையில் இருப்பவர்கள் பலருக்கு வாய்ப்பு தேடி வரும்போது தன் அலுவலகத்தில் சாப்பாடு போட்டு அவர்கள் சினிமா துறையில் முன்னேற உதவியவர் விஜயகாந்த். காசு கொடுக்கிறார்கள் என்பதற்காக வடிவேலு என்ன வேண்டுமானாலும் பேசலாமா?
விஜயகாந்தை திட்டுவாராம். ஜெயலலிதாவை ஏதும் பேசமாட்டாராம். தமிழக முதல்வராக ஜெயலலிதா வருவார் என்பது வடிவேலுவுக்கு தெரியும். வடிவேலு தேர்தலுக்கு பிறகு ஜெயலலிதாவிடம் வருவார் என்பதும் தி.மு.க.வினருக்கு தெரியும்.
இந்த டீலிங் எனக்கு பிடிச்சிருக்கு. அ.தி.மு.க.வுக்கு ஓட்டுப்போடாதீங்க என்று மக்களுக்கு சொல்லி தன் தலையில் மண்ணை வாரி போட்டுக்கொள்கிறார் வடிவேலு. தமிழக மக்கள் தெளிவாக உள்ளனர். அவர்களை எந்த காமெடி பீசாலும் ஏமாற்ற முடியாது.
வடிவேலு அரசியல் கட்சிக்கு ஆதரவு கேட்டு பேசுகிறார் என்றால் அந்த கட்சியின் பணிகளை சொல்லி ஓட்டு கேட்கலாம். அதை விட்டு தனிநபர் விமர்சனம் செய்வது நல்லதல்ல. வடிவேலு 6 மணிக்கு என்ன செய்வார். இரவு 11 மணிக்கு மேல் என்ன செய்வார் என்ற ரகசியம் எல்லாம் எனக்கு தெரியும்’’ என்று பேசினார்.
No comments:
Post a Comment