திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் பாலசுப்பிரமணி போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்த் பிரச்சாரம் செய்தார். அ.தி.மு.க., தே.மு.தி.க. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஒட்டன்சத்திரம் பஸ் நிலையம் அருகே கூட்டணி கட்சிகளின் தொண்டர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டு இருந்தனர். கூட்டத்தின் மத்தியில் திறந்தவேனில் நின்றபடி விஜயகாந்த் பேசும்போது,
’’தமிழகத்தில் எமர்ஜென்சி நடக்கிறது என்று கருணாநிதி சொல்கிறார். அரசு அதிகாரிகள் சரியாக வேலை செய்வது தவறா?. அனைத்து மக்களும் நிம்மதியாக நடமாடுகிறார்கள். எல்லாமே சரியாக தான் நடக்கிறது. தமிழகத்தில் மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் எமர்ஜென்சி நிலையாகி விடும்.
எல்லா விஷயத்தை பற்றியும் பேசுகிறார், ஆனால் விலைவாசி உயர்வை பற்றி மட்டும் பேசவில்லை. பால் உற்பத்தியாளர்கள் கொள்முதல் விலையை உயர்த்தி கொடுங்கள் என்று கெஞ்சுகிறார்கள்.
அதனை செய்யாமல் இப்போது ஓட்டுபோடுங்கள் பருத்தி கொட்டை, புண்ணாக்கு தருகிறோம் என்று கூறுகிறார்கள். பால் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலையை உயர்த்தி, விற்பனை விலையை உயர்த்தாமல் இடைபட்ட விலையை அரசு ஏற்கவேண்டும்.
தி.மு.க.வில் மந்திரிகளுக்கும், அவர்களின் மகன்களுக்கும் தான் தேர்தல் சீட் வழங்கப்பட்டு இருக்கிறது. தி.மு.க.வில் கட்சிக்காக உழைத்தவர்களே இல்லையா?.
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த சினிமாவில் "மக்கள் நலம் மக்கள்நலம் என்றே சொல்வார், தன் மக்கள் ஒன்றே தான் மனதில் கொள்வார்'' என்று பாடல் இருக்கிறது. மக்களை நான் நேரில் சென்று சந்திக்கிறேன், நீங்களும் சந்திக்கலாமே ஏன் வரவில்லை.
நான் சும்மா பேசி கொண்டே இருக்க மாட்டேன். விஜயகாந்த் மக்களுக்காக வாழ்ந்தான் என்று இருக்க வேண்டும். உங்கள் ஊரை சேர்ந்த அ.தி.மு.க. வேட்பாளர் பாலசுப்பிரமணிக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்யுங்கள்’’ என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment