எனது ஓய்வு முடிவு குறித்து இப்போதே கருத்து கூறுவது இயலாது. 2015ல் நடைபெறும் உலகக் கோப்பைப் போட்டியில் நான் பங்கேற்பது குறித்தும் இப்போது கணிக்க முடியாது என்று கூறியுள்ளார் சச்சின் டெண்டுல்கர்.
Getty Images
கடந்த 21 வருடங்களாக கிரிக்கெட் ஆடி வருகிறார் சச்சின். கபில் தேவுடனும் இணைந்து ஆடினார், அசாருதீனுடனும் இணைந்து ஆடினார், கங்குலியுடனும் ஆடினார், ஷேவாக்குடனும் இணைந்து ஆடுகிறார். அவரது ஓய்வு குறித்து பலமுறை கேள்விகள் எழுப்பப்பட்டன. அப்போது அவரது பார்ம் சற்றே சரிவில் இருந்தது. ஆனால் ஓய்வு குறித்துக் கேட்டவர்கள் வாயடைத்துப் போகும் வகையில் அதிரடியாக ரன் குவிக்கத் தொடங்கினார் சச்சின்.
கடந்த சில ஆண்டுகளாக அவர் சிறப்பாகவே ஆடி வருகிறார். இந்த வயதிலும் இவர் இத்தனை ரன்களைக் குவிப்பதும், அவ்வப்போது செஞ்சுரிகளைப் போடுவதும் இளம் வீரர்களை மட்டுமல்ல, மூத்த வீரர்களுக்குமே கூட பெரும் ஆச்சரியமாக உள்ளது.
நடப்பு உலகக் கோப்பைப் போட்டியிலும் கூட இந்திய வீரர்களிலேயே அதிக ரன்களைக் குவித்தவர் சச்சின்தான்.
இந்த நிலையில் அடுத்த உலகக் கோப்பைப் போட்டியிலும் சச்சின் பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து சச்சினிடமே செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர், 2015ல் நான் விளையாடுவேனா என்பது குறித்து இப்போதே ஊகிக்க முடியாது. அதற்கு காலம் நிறைய உள்ளது. அதுகுறித்து இப்போது சிந்திப்பதற்கு தேவையில்லை.
உலகக் கோப்பையை வெல்வது என்பது எனது 21 வருட கால கனவு. அது தற்போது நனவாகியுள்ளது. உலகக் கோப்பையை தூக்கிப் பிடித்தபோது என்னால் எனது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால்தான் ஆனந்தக் கண்ணீர் விட்டு விட்டேன். இந்தியா உலக சாம்பியன் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை.
இந்த சமயத்தில் இதுதான் எனது கடைசி உலகக்கோப்பைப் போட்டியா அல்லது 2015ம் ஆண்டிலும் நான் விளையாடுவேனா என்பது குறித்தெல்லாம் சிந்திக்க முடியாது. இப்போதைய தருணம் மிகவும் மகிழ்ச்சியானது. அதை அப்படியே கொண்டாடி வருகிறோம். பின்னோக்கிப் பார்ப்பதையோ அல்லது எதிர்காலம் குறித்து சிந்திப்பதையோ நாங்கள் யாருமே விரும்பவில்லை.
ஊகங்களைப் பற்றியெல்லாம் சிந்திக்காமல், எங்களது சந்தோஷத்தை அனைவருமே கொண்டாடி வருகிறோம்.
நான் சதமடிக்காமல் போனது குறித்து இப்போது கவலைப்படத் தேவையில்லை. அது பொருத்தமற்றதும் கூட. கோப்பையையே வென்று விட்டோம். எனவே அதுதான் பெரியது என்றார்.
முன்னதாக உலகக் கோப்பையுடன் தனது ஒரு நாள் ஓய்வை சச்சின் அறிவிக்கலாம் என்றும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து அவர் விளையாட முடிவெடுக்கலாம் என்றும் செய்திகள் வெளியாகின. மும்பையில் உள்ள ஆளுநர் மாளிகையில் நேற்று குடியரசுத் தலைவர் அளித்த தேநீர் விருந்தில் பங்கேற்றபோது இதுகுறித்து சச்சினிடம் கேட்டபோதுதான் இவ்வாறு பதிலளித்தார் அவர்.
இதற்கிடையே, சச்சின் எப்போது ஓய்வெடுக்க வேண்டும் என்பதை அவர்தான் முடிவு செய்ய வேண்டும். அதுகுறித்து மற்றவர்கள் கருத்துக்களைத் திணிக்கக் கூடாது என்று முன்னாள் ஜாம்பவான்களான இம்ரான் கான், ஆலன் பார்டர், விவியன் ரிச்சர்ட்ஸ் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.
அவர்கள் சச்சின் குறித்துக் கூறுகையில், டெஸ்ட், ஒரு நாள் போட்டி, டுவென்டி 20 என அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளையும் மிகச் சிறப்பாக ஆடி வருகிறார் சச்சின்.எனவே ஓய்வு குறித்து அவர்தான் முடிவு செய்ய வேண்டுமே தவிர மற்றவர்கள் பேசக் கூடாது என்றனர்.
No comments:
Post a Comment