ஒரு களத்தை இழந்தால் மறுகளத்தில் ஜெயிப்போம் என்ற நம்பிக்கை எனக்கு எப்போதும் உண்டு என ஆலங்குளத்தில் நடந்த விழாவில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.
ஆலங்குளத்தில் மதிமுக மாவட்ட பிரதிநிதி இல்ல திருமணவிழா நடந்தது.
விழாவி்ல் கலந்து கொண்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசுகையில், "தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விஷயத்தில் ஒரு தர்ம யுத்தம் நடந்து வருகிறது. நாக்பூர் சுற்றுச்சூழல் ஆய்வு மையம் மேற்கொண்டு வரும் ஆய்வில் பங்கேற்று விட்டு தான் இந்த விழாவுக்கு வந்துள்ளேன்.
எனது பேரன் டென்னிஸ் விளையாட்டு போட்டியில் பங்கேற்க போவதாகக் கூறினான். அவனுக்கு வயது 9. அவனிடம் நான் சொன்னது ஒன்றே ஒன்றுதான். ஒருவேளை போட்டியில் தோற்றாலும் துவண்டு விடக்கூடாது என்று. உன் தாத்தா (வைகோ) பார்க்காத தோலவியா, ஒரு களத்தை இழந்தால் மறுகளத்தில் ஜெயிப்போம் என்ற நம்பிக்கை எப்போதும் எனக்கு உண்டு என்றேன்.
பெருந்தலைவர் காமராஜரை தேடிப் பதவி வந்தது. தனிப் பெருபான்மையோடு இருந்த போதிலும் மக்கள் நலனுக்காக பதவியை துச்சமென நினைத்து தூக்கி எறிந்தார்.
ஆனால் இன்று எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்ற பேச்சு எழுந்துள்ளது. இந்த விஷயத்தை மையப்படுத்தி ரூ.500 கோடி வரை பந்தயம் நடப்பதாக செய்திகள் வருகின்றன.
முல்லை பெரியாறு, ஸ்டெர்லைட் என மக்கள் நலனுக்காக போராடி வரும் இயக்கம் மதிமுக. நம் இனத்திற்கு தீங்கு விளைவித்து வரும் ராஜபக்சே இந்தியா வருகையின் போது ராஜ உபசாரம் நடந்தது.
கிரிக்கெட்டில் இந்தியா ஜெயித்ததற்கு கிரிக்கெட் ரசிகர்கள் வாழ்த்து தெரிவிக்கின்றனர். அதே நேரம் இலங்கை தோல்வியால் 4 தமிழக மீனவ குடும்பங்கள் நிலை குலைந்து போனதே, இதையேல்லாம் நாம் சிந்தித்து பார்க்க வேண்டும்", என்றார்.

No comments:
Post a Comment