நடிகர் வடிவேலு தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். வடிவேலுவின் அலுவலகம் சாலி கிராமத்தில் உள்ள வேதவல்லி தெருவில் உள்ளது. நேற்று இரவு 10 1/2 மணி அளவில் வடிவேலுவின் மானேஜர் முத்தையா அலுவலகத்தில் அமர்ந்து இருந்தார். அப்போது அவரது செல்போனுக்கு ஒரு மர்ம போன் வந்தது. அதில் பேசியவன், தேர்தல் பிரசாரத்தில் வடிவேலு பேச்சு சரி இல்லை. எனவே வடிவேலு பிரசார வேனை குண்டு வைத்து தகர்ப்போம். அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசுவோம் என்று கூறி விட்டு போனை வைத்து விட்டான்.
இதை தொடர்ந்து மானேஜர் முத்தையா இன்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு நேரில் வந்து இதுபற்றி புகார் கூறினார். உளவுத்துறை போலீஸ் துணை கமிஷனர் பாண்டியனிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் அவர் கூறி இருந்ததாவது:-
நான் 2 வருடமாக வடிவேலுவின் மானேஜராக இருக்கிறேன். 1.4.2011 முதல் வடிவேலு தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகிறார். தி.மு.க. சாதனைகளை விளக்கி கூறி பிரசாரம் செய்கிறார். அவரது பிரசாரத்தை பார்க்க மக்கள் பெருமளவில் திரண்டு வருகின்றனர். இதனால் அவருக்கு மிரட்டல் வருகிறது. நேற்று இரவு எனது போனுக்கு “9789134192” என்ற எண்ணில் இருந்து யாரோ பேசினார்கள். அதில் பேசியவர் வடிவேலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார். அவர் யார்? என்று தெரியவில்லை.
வெடிகுண்டு மிரட்டல் வருவதால் சாலி கிராமம், லோகையா தெருவில் உள்ள வடிவேலு வீடு, சாலி கிராமத்தில் உள்ள அலுவலகம், மதுரை நாட்டாமை தோப்பில் உள்ள வீடு ஆகியவற்றுக்கு போலீஸ் பாதுகாப்பு தர வேண்டும். வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு அவர் மனுவில் கூறி இருந்தார்.
இதையடுத்து சாலி கிராமத்தில் உள்ள வடிவேலு வீடு, அலுவலகம், மதுரை வீடு ஆகிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் யார்? என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.

No comments:
Post a Comment