சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக நடிகர் வடிவேலு சூறாவளி ëசுற்றுப்பயணம் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நேற்று இரவு சிதம்பரம் மேலவீதி அண்ணாசிலை அருகில் சிதம்பரம் தொகுதி தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஸ்ரீதர் வாண்டையாரை ஆதரித்து பேசினார்.
இன்று காலையில் சிதம்பரம் அண்ணாலை பல்கலைக் கழக துணை வேந்தர் பங்காளவில் தங்கியிருந்த முதல்-அமைச்சர் கருணாநிதியை நடிகர் வடிவேலு சந்தித்து பேசினார். தேர்தல் பிரசாரம் குறித்து ஆலோசனை கேட்ட அவர், தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பதாகவும் கருணாநிதியிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
பின்னர் நடிகர் வடி வேலு நிருபர்களிடம் கூறியதாவது:-
தி.மு.க. கூட்டணிக்கு பொதுமக்கள் மத்தியில் நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகிறது. நான் செல்லும் இடங்களில் எல்லாம் பொதுமக்கள் திரண்டு நின்று ஆர்வமுடன் பேச்சை கேட்கின்றனர். அதுதவிர கருணாநிதி 6-வது முறையாக முதல்-அமைச்சர் ஆவார் என உறுதியாக கூறுகின்றனர்.
தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை மக்களை சென்றடைந்து விட்டது. எனக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். அவர்களுக்கு என்னுடைய பதில், தி.மு.க.வின் தேர்தல் அறிக்கைதான் `பாம்' (வெடிகுண்டு). மற்றபடி ஒரு பாம்பு கூட எனது அருகே நெருங்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment