கோ பட விவகாரத்தில் என்னை சிம்பு திட்டினாரா இல்லையா என்பது பற்றி தெரிந்து கொள்ள விரும்பவில்லை, என்றார் நடிகர் ஜீவா.
ஜீவா-பியா-கார்த்திகா நடித்த கோ படம் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் வெற்றியை செய்தியாளர்களுடன் இன்று பகிர்ந்து கொண்டார் ஜீவா. போர் பிரேம்ஸ் திரையரங்கில் நடந்த இந்த சந்திப்பின் போது, "கோ படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. நான் எதிர்பாராத இடங்களிலிருந்தெல்லாம் எனக்குப் பாராட்டுக்கள் வந்தவண்ணம் உள்ளன.
குறிப்பாக என்னை அத்தனை அழகாகக் காட்டியிருந்தனர் இயக்குநர் கேவி ஆனந்தும் காமிராமேன் ரிச்சர்ட் எம் நாதனும். இந்தப் படத்தைப் பார்த்த என் மனைவியால் அது நான்தானா என்று நம்பவே முடியவில்லை. "இது நீங்கதானா... வேற பொண்ணு யாரையாவது உஷார் பண்ணிடப் போறீங்க. எதுக்கும் இனிமே நான்தான் ஜாக்கிரதையா இருக்கணும் போல" என்று கிண்டலடித்துக் கொண்டே இருக்கிறார்.
அந்த அளவுக்கு படம் எல்லாரையும் கவர்ந்திருக்கிறது. பத்திரிகையுலகில் நானும் ஒருவனாகவே இப்போது உணர்கிறேன்," என்றார்.
அவரை இடைமறித்த நிருபர்கள், 'இந்தப்படம் குறித்து ஃபேஸ்புக்கில் உங்களைத் திட்டி எழுதியிருக்கிறாராமே சிம்பு?' என்றனர்.
அதற்கு பதிலளித்த ஜீவா, "இதெல்லாம் எதுக்கு சார்... நான் அது என்ன விவகாரம் என்று கூட தெரிந்து கொள்ள விரும்பவில்லை", என்றார்.
கோ படத்தில் முதலில் சிம்புதான் நடிப்பதாக இருந்தது. ஆனால் கதை மற்றும் ஹீரோயினை மாற்றச் சொல்லி அவர் வற்புறுத்தியதால், படத்திலிருந்தே அவரை நீக்கிய இயக்குநர் கேவி ஆனந்த், ஜீவாவை வைத்து எடுத்தார்.
சிம்பு - ஜீவா ரசிகர்கள் மோதல்...
படம் வெளியான பிறகு, சிம்புவின் ரசிகர்கள் சிலர் பேஸ்புக், ஆர்குட் போன்ற சமூக நெட்வொர்க் தளங்களில், "நல்ல வேளை இந்தப் படத்தில் சிம்பு நடிக்கவில்லை. அவர் நடிக்க வேண்டிய கதை இல்லை. ஒரு ஹீரோவுக்குரிய ஸ்கோப் இல்லை. நன்றி சிம்பு" என எழுதி வருகின்றனர்.
ஜீவாவின் ரசிகர்களோ, "கோ மாதிரி ஒரு நல்ல படத்தை கெடுக்காமல் விட்ட சிம்புவுக்கு நன்றி" என்று எழுதி வருகின்றனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சிம்பு, "ஒரு படத்தில் நடிப்பதும் நடிக்காமல் போவதும் அந்த ஹீரோவின் விருப்பம். அதுகுறித்த ரசிகர்களின் கமெண்ட்களை நான் வரவேற்கிறேன். ஆனால் அது மற்ற ஹீரோக்களைப் புண்படுத்தும் அளவுக்கு இருக்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்", என்று கூறியுள்ளார்.

No comments:
Post a Comment