கோவை மாவட்டம், மடத்துக்குளம் தொகுதியில், தி.மு.க., வேட்பாளர் அமைச்சர் சாமிநாதனுக்கும், அ.தி.மு.க., வேட்பாளர் சண்முகவேலுக்கும் பலத்த போட்டி நிலவியது. ஆதிதிராவிட மக்களின் ஓட்டு வங்கியை மாற்ற முடியாது என முடிவெடுத்த அமைச்சர் தரப்பு, முரசு சின்னத்தை கையில் எடுத்தது. இத்தொகுதியில், சடையப்பன் என்ற சுயேச்சைக்கு, முரசு சின்னம் ஒதுக்கப்பட்டது.
ஆதிதிராவிட மக்களிடையே பிரபலமடைந்துள்ள முரசு சின்னத்தை விளம்பரப்படுத்தி, அ.தி.மு.க., ஓட்டுகளை பிரிக்க, தி.மு.க., திட்டமிட்டது. சுயேச்சை வேட்பாளருக்கும், ஆதரவாளருக்கும் பிரசாரத்திற்கு, ஜீப் மற்றும் இதர செலவுகள் தி.மு.க.,வினரால் இறைக்கப்பட்டன. அ.தி.மு.க.,விற்கு இந்த தகவல் கிடைத்ததும், "அப்செட்' ஆகி, சுயேச்சையை முடக்க முடிவெடுக்கப்பட்டது.
முக்கோணம் கிராமத்தில் பிரசாரம் செய்து கொண்டிருந்த சுயேச்சையை, அ.தி.மு.க., கூட்டணி கட்சியினர் மடக்கி, அனுமதி இல்லாமல் வாகன பிரசாரம் மற்றும் தே.மு.தி.க., கட்சி கொடி நிறத்தை பயன்படுத்தியது ஆகியவற்றை, கோமங்கலம் போலீசில் போட்டுக் கொடுத்து, வழக்கு பதிவு செய்ய வைத்தனர்.
மிரண்டு போன சுயேச்சை அமைதியாகி விட, அதிர்ச்சியான தி.மு.க., மீண்டும், "பூஸ்ட்' அளித்தது. மடத்துக்குளம் ஒன்றிய கிராமங்களில் பிரசாரம் செய்து கொண்டிருந்த போது, சுயேச்சைக்கு, அ.தி.மு.க.,வினரால் "கவனிப்பும்' பலமாக நடந்தது. "கவனிப்பால்' வெளியில் வர முடியாமல் சுயேச்சை வீட்டில் பதுங்க, தி.மு.க.,வினர் வேறு அம்புகளை தொடுத்தனர்.
முரசு சின்னத்திற்கு ஓட்டளிக்கும்படியான விளம்பரம் பத்திரிகைகளில் தொடர்ந்து வெளியாகி, அ.தி.மு.க.,வினரை கடுப்படித்தது. தி.மு.க.,வினர், முரசு சின்னத்திற்கு செய்த செலவுக்கு பயன் கிடைக்குமா என்பது, ஓட்டு எண்ணிக்கையன்று தெரிய வரும்.

No comments:
Post a Comment