சட்டசபை தேர்தலில் மைலாப்பூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக தங்கபாலு மனைவி ஜெயந்தி அறிவிக்கப்பட்டார். கையெழுத்து போடாமல் தாக்கல் செய்த அவரது வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மாற்று வேட்பாளராக மனு செய்திருந்த தங்கபாலு காங்கிரஸ் வேட்பாளராக களம் இறங்கினார். ஏற்கனவே வேட்பாளர் தேர்வில் அதிருப்தி அடைந்து இருந்த காங்கிரசார் தங்கபாலு வேட்பாளர் ஆனதால் கடும் அதிருப்தி அடைந்தார்கள்.
மாநிலம் முழுவதும் தங்கபாலுவுக்கு எதிராக போராட்டம் நடத்தினார்கள். பல தொகுதிகளில் காங்கிரஸ் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களுக்கு எதிராக போட்டி வேட்பாளர்கள் மனு செய்தார்கள். பல்வேறு குழப்பங்களுக்கு இடையே காங்கிரஸ் தேர்தலை சந்தித்தது. வாக்குப்பதிவு முடிந்த அன்று இரவோடு இரவாக எஸ்.வி. சேகர் எம்.எல்.ஏ., முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன், தென்சென்னை மாவட்ட தலைவர் மங்கள்ராஜ், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் ஜேம்ஸ் பிரகாஷ், சுரேஷ், ஜவகர் பாபு உள்பட 19 பேரை அதிரடியாக நீக்கினார்.
இந்த அதிரடி நடவடிக்கைக்கு காங்கிரசில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. சத்யமூர்த்தி பவன் முற்றுகை, உருவபொம்மை எரிப்பு என்று போராட்டம் வலுத்தது. சொந்த கட்சியினரின் தாக்குதலில் இருந்து தப்பிக்க தங்கபாலுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அவரது வீட்டுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. சத்ய மூர்த்திபவனுக்கு வரும் போதெல்லாம் ஆதரவாளர்களை துணைக்கு வந்தனர்.
தங்கபாலுவின் நடவடிக்கை பற்றியும், தமிழக காங்கிரஸ் இக்கட்டான சூழ் நிலையில் சிக்கி தவிப்பது பற்றியும் மத்திய மந்திரிகள் ப.சிதம்பரம், ஜி.கே.வாசன் ஆகியோர் சோனியாவை நேரில் சந்தித்து புகார் தெரிவித்தனர். அதிகார வரம்பை மீறி செயல்படுவதாக இளைஞர் காங்கிரஸ் தரப்பிலும் ஏராளமான புகார் மனுக்கள் டெல்லியில் குவிந்தன.
இதையடுத்து நீக்கப்பட்ட இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளிடம் விசாரணை நடத்துவதற்காக டெல்லியில் இருந்து சஜீவ்ஜோசப் தலைமையில் ஒரு குழுவை கட்சி மேலிடம் அனுப்பி வைத்தது. அந்த குழுவினர் தங்கபாலு விடம் விசாரித்தனர். மேலும் நீக்கப்பட்டவர்களை ஒவ்வொருவராக அழைத்து சஜீவ் ஜோசப் விசாரித்தார். அப்போது, தங்கபாலு மீது அவர்கள் அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்தனர். டெல்லி மேலிட தலைவர்களை தன் கைவசப்படுத்தி வைத்துள்ளார். எங்களால் நேரடியாக டெல்லியில் முறையிட முடியாது. எனவே கட்சியின் கவனத்தை ஈர்க்கவே போராட்டத்தில் ஈடுபட்டோம்.
கட்சிக்கு எதிராக செயல்படவில்லை. சோனியா, ராகுல் எங்களை மன்னிப்பு கேட்க சொன்னால் மன்னிப்பு கேட்கவும் தயாராக இருக்கிறோம். ஆனால் தங்கபாலு தலைவராக நீடிக்க கூடாது. அவரை நீக்காவிட்டால் தொடர்ந்து போராட்டம் நடக்கும் என்றனர். இதற்கிடையில் தங்கபாலுக்கு எதிராக காங்கிரஸ் சீரமைப்பு குழு புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. ஜி.ஏ.வடிவேலு அமைப்பாளராக இருக்கும் இந்த குழுவில் மாநிலம் முழுவதிலும் இருந்து காங்கிரஸ் முன்னணி தலைவர்கள் இடம் பெற்றுள்ளனர்.
குலாம்நபி ஆசாத், தங்கபாலு இருவரையும் தமிழக பதவிகளில் இருந்து நீக்கும் வரை போராடுவோம் என்று இந்த குழுவினர் அறி வித்துள்ளனர். பல முனைகளில் இருந்தும் தங்கபாலுக்கு எதிர்ப்பு கிளம்பி இருப்பதால் டெல்லி மேலிடம் யோசிக்க தொடங்கி உள்ளது. இன்னும் இரண்டு நாட்களில் விசாரணை குழு அறிக்கை டெல்லியில் தாக்கல் செய்யப்பட உள்ளது. தமிழக காங்கிரஸ் நிலவரம் குறித்து சோனியாவும், ராகுலும் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள்.
உண்மை நிலவரம் குறித்து ரகசியமாக தகவல்களை சேகரித்து வருகிறார்கள். ஓட்டு எண்ணிக்கை முடிந்த பிறகு அடுத்த மாத இறுதிக்குள் தங்கபாலு பதவியில் இருந்து நீக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. மேலிட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள குலாம் நபி ஆசாத், தங்கபாலுக்கு ஆதரவாக செயல்படுவதாக எழுப்பப்பட்டுள்ள புகார் காங்கிரஸ் மேலிடத்தை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அவர்கள் இருவரையும் தொடர்புபடுத்தி வந்துள்ள புகார்கள் மீதும் சோனியா ரகசிய விசாரணை மேற் கொண்டுள்ளார்.

No comments:
Post a Comment