""போர் குற்றம் புரிந்ததற்காக, சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கை அரசை விசாரிக்க வேண்டும் என்பதே, தி.மு.க.,வின் நிலை,'' என, லோக்சபா எம்.பி.,யும், தி.மு.க., செய்தி தொடர்பாளருமான டி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: இலங்கை போரில் தமிழர்கள் கொலை செய்யப்பட்டதோடு, மனித உரிமை மீறல்களில் இலங்கை அரசு ஈடுபட்டது என்ற குற்றச்சாட்டில், தி.மு.க., விற்கு மாற்றுக் கருத்து இல்லை. மனித உரிமை மீறலை, இலங்கை அரசு செய்ததாக, ஐக்கிய நாடுகள் சபை, சுட்டிக்காட்டியுள்ளது. இதனடிப்படையில், இலங்கை அரசை சர்வதேச நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும்; இது தொடர்பாக இலங்கையின் மீது பொருளாதார தடை உள்ளிட்ட நடவடிக்கைகளை, ஐக்கிய நாடுகள் சபை எடுக்க வேண்டும் என்றும் தி.மு.க., வலியுறுத்துகிறது. இலங்கை அரசின் மீது இந்தியா நேரடியாக நடவடிக்கைகளில் ஈடுபட்டால், அங்கு நடைபெற்று வரும் தமிழர்களுக்கான மேம்பாட்டு திட்டங்கள் தடைபட்டு விடும். போரில் வீடுகளை இழந்த தமிழருக்களுக்காக, 50 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. மேலும், கல்வி மற்றும் அடிப்படை வசதிகளை, தமிழர்களுக்காக ஏற்படுத்த இந்திய அரசு 500 கோடி ரூபாய் உதவி அளித்துள்ளது.
முகாமில் உள்ள தமிழர்களை மறுகுடியமர்த்தம் செய்யும் வேலைகள் நடந்து வருகின்றன. இப்பணிகள் தொடர்ந்து நடந்தால் தான், இலங்கை தமிழர்கள் பயன் பெறுவர். இதை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டிய சூழலில் நாம் உள்ளோம். அதே நேரத்தில், இலங்கை பிரச்னையை அரசியல் பிரச்னையாக அணுகாமல், மக்கள் இயக்கமாக உருவாக்க வேண்டும். தி.மு.க.,வை தனிமைப்படுத்தி விட்டு, அரசியல் ஆதாயத்திற்காக, இலங்கை பிரச்னையை கையில் எடுப்பது, வெற்றியை தராது. மாறாக, தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும், இயக்கங்களும் இணைந்து, ஈழத் தமிழர்களுக்கான பிரச்னைக்கு மக்கள் இயக்கத்தை உருவாக்கி, மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும். இதற்கு, தி.மு.க., எப்போதும் தயாராக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment