தேனி மாவட்டத்தில் அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, விஜயகாந்த் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு பெரியகுளம் நகருக்கு நேற்று பகல் 2 மணியளவில் வந்தார். புதிய பஸ் நிலைய பிரிவு அருகே திறந்த வேனில் நின்றபடி, பெரியகுளம்(தனி) தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் ஏ.லாசரை ஆதரித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பேசினார்.
அப்போது அவர், ‘’இந்த தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பெரியகுளம்-கொடைக்கானல் மலைச்சாலை திட்டத்தை நிறைவேற்ற வேட்பாளர் லாசர் நிச்சயம் போராடுவார்.
ஏனெனில் அவர் சார்ந்திருக்கும் இயக்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு இயக்கம் மக்களின் பிரச்சனைக்காக போராடும் இயக்கம் ஆகும்.
இந்த தருணத்தில் கம்யூனிஸ்டு தோழர் ஜீவா பற்றி நான் கூற விரும்புகிறேன். அவரை ஒரு பள்ளிக்கூட திறப்பு விழாவிற்கு அழைத்திட காமராஜர் சென்றுள்ளார். அப்போது தன்னிடம் இருந்த ஒரு வேட்டி-சட்டை அழுக்காகி விட்டதை ஜீவா துவைத்து போட்டு இருந்தார்.
இதனால் அந்த துணி காய வேண்டும் என்பதற்காக காமராஜரிடம் பேச்சுக்கொடுத்துக்கொண்டு இருந்தார். அவருடைய நேரம், வெயில் சரியாக அடிக்காததால், வேறு வழியின்றி தனது ஒரு வேட்டி-சட்டையை துவைத்து போட்டு உள்ளதை ஜீவா, காமராஜரிடம் கூறினார். இதனைக்கேட்டு கண் கலங்கினார் காமராஜர்.
இதே போன்று ஜீவாவை பற்றி இன்னும் ஒரு சம்பவத்தை கூற விரும்புகிறேன். அவர் அலுவலகத்தில் இருந்த போது, அங்கு சிறுமி ஒன்று நீண்ட நேரம் அழுது கொண்டு இருந்தது. அந்த சிறுமியிடம் ஜீவா கேட்டபோது,
அந்த சிறுமி தனது தந்தை மற்றும் தாயார் பெயரை எழுதிக்கொடுத்தது. அப்போது தான் அது தனது குழந்தை என்று கண்ணீர் விட்டார். அந்த அளவு நாட்டுக்காக தனது குடும்பத்தை கூட மறந்து பணியாற்றிய கம்யூனிஸ்டு தோழர் ஜீவாவின் வழியில் வந்த இயக்க தோழர்களுக்காக நான் இங்கு ஓட்டுக்கேட்டு வந்துள்ளேன்’’ என்று பேசினார்.
No comments:
Post a Comment