தமிழக அரசியலில் பீஷ்மராக முதல் அமைச்சர் கருணாநிதி உள்ளார். அவருக்கு நிகர் அவர்தான் என்று நடிகர் சிரஞ்சீவி பேசினார்.
தி.மு.க. தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்து வருகிறார். அவர் ஓசூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத்தை ஆதரித்து ஓசூரில் உள்ள தளி ஹட்கோ பகுதியில் பிரசார கூட்டத்தில் பேசினார்.
அப்போது சிரஞ்சீவி பேசியதாவது:
ஆந்திராவில் பிறந்த நான், தமிழ்நாட்டில் சினிமா துறையில் வளர்ந்தேன். தி.மு.க. கூட்டணியை ஆதரித்து நான் தற்போது தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்து வருகிறேன். இந்த தேர்தலில் ஜனநாயக முற்போக்கு கூட்டணியை நீங்கள் ஆதரித்தால் தமிழகம் முதன்மை மாநிலமாக மாறும்.
பெண்களின் வாழ்க்கை உயர அன்னை சோனியாகாந்தி பணியாற்றி வருகிறார். அவர்களுக்கு கடன் உதவி செய்து வருகிறார். இந்த கூட்டணியில் நான் சேர்ந்து இருப்பதால் மகிழ்ச்சி அடைகிறேன்.
தமிழக அரசியலில் பீஷ்மராக முதல் அமைச்சர் கருணாநிதி உள்ளார். அவருக்கு நிகர் அவர்தான்.
மீண்டும் அவர் ஆட்சிக்கு வந்தால் ஒகேனக்கல் குடிநீர் திட்டம் விரைந்து நிறைவேற்றப்பட்டு இந்த பகுதி மக்களுக்கு காவிரி நீர் கிடைக்கும். அதே போல சாலைகள் மேம்படுத்தப்படும். இதை போல எண்ணற்ற திட்டங்கள் இந்த பகுதி மக்களுக்கு கிடைக்கும்.
தற்போது காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதியாக உள்ள நான், ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறேன். இந்த தொகுதியில் போட்டியிடும் கோபிநாத்தை நீங்கள் வெற்றி பெற செய்யுங்கள். சோனியா காந்தி ஏழைகளின் விடிவெள்ளியாக உள்ளார். காங்கிரஸ் ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் மக்களுக்காக செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக விவசாயிகளின் ரூ. 72 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.
அனைவருக்கும் கல்வி, உணவு என ஏழைகளுக்காக பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டு அதன் மூலம் மக்கள் பயன் அடைந்து வருகிறார்கள். இதற்கு அதிகமாக கை கொடுத்தவர் தமிழக முதல் அமைச்சர் கருணாநிதி.
தமிழக அரசு கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் இலவச கலர் டி.வி., 1 ரூபாய்க்கு ரேஷன் அரிசி, கர்ப்பிணி பெண்களுக்கு மாதம் ரூ.6 ஆயிரம் நிதி உதவி, இலவச கியாஸ் அடுப்பு உள்பட பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தியது. இதனால் ஏராளமான மக்கள் பயன் அடைந்தனர். முதல் அமைச்சர் கருணாநிதி, சொல்லியதையும் செய்தார். சொல்லாததையும் செய்தார்.
கடந்த 5 ஆண்டு காலத்தில் தமிழகம் தொழில் வளர்ச்சியில் முன்னேற்றம் அடைந்து வருகிறது. மத்திய மந்திரிகளாக தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் பொறுப்புக்கு வந்ததால் பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டது.
மத்திய அரசு தமிழகத்திற்கு அனைத்து துறைகளிலும் ரூ.1 லட்சம் கோடி செலவில் ஏழை எளிய மக்கள் பயன் அடையும் வகையில் திட்டங்களை தந்துள்ளது.
தி.மு.க. தேர்தல் அறிக்கையில் மாணவர்களுக்கு லேப் டாப், கல்வி உதவி தொகை போன்றவை அறிவித்துள்ளதை மக்கள் வரவேற்கிறார்கள். மற்ற கட்சிகள் தேர்தல் நேரத்தில் வாக்குறுதிகள் தருகிறார்கள். ஆனால் அதை நிறைவேற்றுவதில்லை. சோனியா காந்தியும், முதல் அமைச்சர் கருணாநிதியும் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றி தந்துள்ளார்கள்.
இந்த தொகுதியில் போட்டியிடும் கோபிநாத் உங்களுக்கு நல்ல அறிமுகமானவர். அவரை வெற்றி பெற செய்தால் நன்றி கூற மீண்டும் உங்களை வந்து சந்திப்பேன் என்றார்.

No comments:
Post a Comment