முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழியின் பெயர் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு குற்றப்பத்திரிக்கையில் இடம் பெற்றுள்ளதைத் தொடர்ந்து நாளை திமுகவின் உயர் நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம் அவசரமாக கூட்டப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசுக்கு நெருக்கடி தரும் வகையில் அரசியல்ரீதியாக திமுக முக்கிய முடிவெடுக்கும் என்று தெரிகிறது.
இந்த வழக்கில் கூட்டுச் சதியாளராக கனிமொழி குற்றம் சாட்டப்பட்டுள்ளதால் திமுகவுக்குப் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில் திமுகவின் முக்கிய குழுவான உயர் நிலை செயல் திட்டக் குழுவின் கூட்டத்தை நாளை கூட்டியுள்ளனர்.
இதுதொடர்பாக கட்சிப் பொதுச் செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சராக இருந்த ஆ.ராசா மீது சாற்றப்பெற்ற ஒரு குற்றச்சாட்டின் தொடர்பாக கலைஞர் தொலைக்காட்சியும் அதில் இணைக்கப்பட்டு-அந்த நிறுவனத்தின் சார்பில் வாங்கப்பட்ட கடன் 200 கோடி ரூபாயும், கடனை வழங்கிய நிறுவனத்துக்கு வட்டியுடன் திரும்பச்செலுத்தி, அதற்கான வருமான வரித் துறை சம்பந்தப்பட்ட ஆவணங்கள் உட்பட அனைத்தையும் ஆதாரமாகத்தரப்பட்டது.
இத்தனையும் வெளிப்படையான முறையில் நடைபெற்ற ஒன்றே தவிர-எவ்விதமான ஒளிவு மறைவோ மற்றும் சதியோ இல்லை என்பதை எடுத்துக்காட்டி நிரூபிக்கப்பட்டது. இதன் பிறகும்-வாங்கிய கடன் தொகையைக்கூட நேர்மையான முறையில் திருப்பிச்செலுத்தியுள்ள நிலையில் கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்தில்-தலைவர் கலைஞர் அவர்களின் மகள் கனிமொழி ஒரு பங்குதாரர்-அதைப்போல சரத்குமார், ஒரு நிர்வாக பங்குதாரர் என்ற முறையில் இருவருமே விசாரிக்கப்பட்டு-கலைஞரின் துணைவியார் தயாளு அம்மையாரையும் விசாரித்து இவற்றை பூதாகரமாக விளம்பரப்படுத்தினர்.
இறுதியில் இப்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தல் என்ற செய்தியையும் பெரியதோர் விளம்பரமாக்கி-கனிமொழிக்கும், நிர்வாகப் பங்குதாரர் சரத்குமாருக்கும் குற்றப்பத்திரிகை வழங்கப்படும் என்று அறிவித்திருக்கின்றனர்.
இந்த நிலையில், கழகம் எத்தகைய நடவடிக்கை மேற்கொள்வது என்பது பற்றி கழகத்தின் உயர்நிலை செயல்திட்டக்குழுவில் விவாதித்து முடிவெடுக்கலாம் என்ற அடிப்படையில் 27-4-2011 அன்று காலை 10 மணி அளவில் அண்ணா அறிவாலயம், முரசொலி மாறன் வளாகத்தில் அந்தக்கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்படுகிறது.
அந்தக்கூட்டத்தின் முக்கியத்துவம் கருதி தி.மு.கழக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று அன்பழகன் தெரிவித்துள்ளார்.
இக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைமையிலான மத்திய கூட்டணி அரசுக்கு நெருக்கடி தரும் வகையில் அரசியல்ரீதியாக திமுக முக்கிய முடிவெடுக்கும் என்று தெரிகிறது.
No comments:
Post a Comment