பாபா ஒரு மகான். ஒப்பற்ற சமூக சேவகர், அவர் மீண்டும் அவதரிப்பார், என்றார் நடிகரும் காங்கிரஸ் பிரமுகருமான சிரஞ்சீவி.
புட்டபர்த்தி ஆசிரமத்தில் சாய்பாபா உடலுக்கு நடிகர் சிரஞ்சீவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறுகையில், "பாபா இறந்துவிட்டார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை.
சாய்பாபா ஆன்மீக பணிகளில் மட்டுமின்றி சமூக சேவைகளிலும் சிறந்து விளங்கினார். நான் சில ஆண்டுகளுக்கு முன்புதான் அவரை சந்தித்தேன். அவர் என்னிடம், எப்படி இருக்கிறாய் பங்காரு (தங்கம்)? என்று விசாரித்தார். அப்போது நான் சினிமாவில் எனக்கு ஏற்பட்ட சில பிரச்சினைகள் பற்றி கூறினேன்.
அதற்கு அவர், இந்த பிரச்சினை உடனே தீர்ந்து விடும். நிம்மதியுடன் செல் என்றார். அவர் சொன்னபடியே எனது பிரச்சினை உடனடியாகத் தீர்ந்தது. சாய்பாபா போன்ற மிகச் சிறந்த மனிதநேயம் கொண்டவர்களால்தான் இந்தியா வளர்ச்சி பெற்று திகழ்கிறது. அவர் மீண்டும் இந்த உலகில் தோன்றி மக்களை காப்பார்," என்றார்.
பாபாராம் தேவ்: யோகா குரு பாபாராம் தேவ் கூறுகையில், "சாய் பாபாவின் மரணம் உடலுக்கு மட்டும்தான் அவரது ஆன்மாவுக்கு அல்ல. அவரது ஆன்மா என்றும் நம்முடன்தான் இருக்கும். சாய்பாபா ஆன்மீக உலகத்தின் சிறந்த குரு. மனிதனுக்கு செய்யும் சேவை கடவுளுக்கு செய்யும் சேவைக்கு நிகரானது என்பதில் மிக உறுதியாக இருந்தவர்.
குடிநீர், மருத்துவம், கல்வி போன்றவற்றுக்கு சாய்பாபா முக்கியத்துவம் கொடுத்தார். அரசு செய்யாத பணிகளை கூட திறம்பட செய்து பொதுமக்களின் இதயத்தில் இடம் பெற்றார். அவர் விட்டுச் சென்ற பணிகளை தொய்வின்றி தொடர்வதுதான் நாம் அவரது ஆத்மாவுக்கு செலுத்தும் அஞ்சலி.
அன்பை மனிதர்களிடம் போதித்து அதன்படி தானும் நடந்து நல்ல வழிகாட்டியாக விளங்கினார் பாபா. அவரது போதனைகள் படி நடந்து நாட்டின் வளர்ச்சிக்காக நாம் பாடுபட வேண்டும்," என்றார்.
No comments:
Post a Comment