கூட்டணியில் இருக்கும் எல்லா கட்சிகளும் ஒரே தேர்தல் அறிக்கையை வெளியிடவேண்டும் என்பது அல்ல. கூட்டணி என்பது தொகுதி உடன்பாட்டுக்கு மட்டும் தான் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மத்திய குழு உறுப்பினர் டி.கே.ரெங்கராஜன் கூறினார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
தேர்தல் ஆணையம் முழுமையான விதிமுறைகளை காலம் தாழ்த்தாமல் அமல்படுத்தவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். பணத்தை பல இடங்களுக்கும் கொண்டு சென்று சேர்த்து விட்டார்கள். ஆணையம் இன்னும் தீவிரமாக செயல்பட்டு வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடைபெறாமல் தடுக்க வேண்டும். முறைகேடுகளை தடுக்க தேர்தல் ஆணையத்துக்கு முழு அதிகாரம் உண்டு, அவர்கள் எந்த இடத்திலும் சோதனை போடலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்து இருப்பதை வாவேற்கிறோம்.
தேர்தல் நடத்தும் அதிகாரிகள் எந்த கட்சியின் பக்கமும் சாயாமல் நடுநிலையோடு நடந்து கொள்ள வேண்டும். எனது காரை கூட 3 இடங்களில் தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை போட்டார்கள். தேர்தல் ஆணையத்தின் இந்த பணியை பாராட்டுகிறேன்.
தேர்தலில் அ.தி.மு.க அறுதி பெரும்பான்மை இடங்களை பெற்று தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்கும். கூட்டு மந்திரி சபை அமைவதற்கான வாய்ப்பு இருக்காது. தோழமை கட்சி என்ற அடிப்படையில் அவர்கள் சரியான திசையில் செல்வதற்கான ஆலோசனைகளை நாங்கள் வழங்குவோம்.
அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இலவச திட்டங்களை அறிவித்து இருப்பது அவர்களது கட்சியின் வாக்குறுதி. அதற்கான நிதி ஆதாரம் எப்படி வரும் என்பதையும் அவர்கள் அறிவித்து இருக்கிறார்கள். நாங்கள் எங்கள் கட்சி சார்பில் தனி தேர்தல் அறிக்கை வெளியிட்டு இருக்கிறோம். கூட்டணியில் இருக்கும் எல்லா கட்சிகளும் ஒரே தேர்தல் அறிக்கையை வெளியிடவேண்டும் என்பது அல்ல. கூட்டணி என்பது தொகுதி உடன்பாட்டுக்கு மட்டும் தான். இவ்வாறு டி.கே.ரெங்கராஜன் கூறினார்.
No comments:
Post a Comment