மனநலம் குன்றிய ஒருவரைப் பற்றிய படத்துக்கு தேவர் இன மக்கள் தெய்வமாக வழிபடும் தேவர் பெயரைச் சூட்டி அவமானப்படுத்தியுள்ளதால், அப்படத்தை தடை செய்ய வேண்டும் என முதல்வர் கருணாநிதியிடம் சிவசேனா கட்சி மனு கொடுத்துள்ளது.
ஏற்கெனவே இப்படத்துக்கு தேவர் குல கூட்டமைப்பும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தமிழ் மாநில சிவசேனா கட்சி தலைவர் எம்.திரவியபாண்டியன் (ஒச்சாயி படத் தயாரிப்பாளர்) அண்ணா அறிவாலயத்தில் இன்று முதல்வர் கருணாநிதியைச் சந்தித்து மனு கொடுத்தார்.
அதில், "இரும்பு மனிதர் என்றால் வல்லபாய் பட்டேல். வங்கத்து சிங்கம் என்றால் நேதாஜி, பேரறிஞர் என்றால் அண்ணா, மூதறிஞர் என்றால் ராஜாஜி, புரட்சித்தலைவர் என்றால் எம்.ஜி.ஆர்., கர்மவீரர் என்றால் காமராஜர், சட்டமேதை என்றால் அம்பேத்கார், கலைஞர் என்றால் கருணாநிதி. இப்படி ஒவ்வொரு தலைவர்களுக்கும் அடைமொழி கொடுத்து அழைப்பது தமிழ் மக்களுக்கு விருப்பமான ஒன்றாக இருந்து வருகிறது.
அப்படித்தான் தெய்வீகத் திருமகன் என்றும் தெய்வத் திருமகன் என்றும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை மக்கள் நேசத்துடன் அழைத்து வருகிறார்கள். தேவரைக் கடவுளுக்கு இணையாக வணங்கி வருகிறார்கள்.
தேவர் இறந்தபோது அனைத்து சாதியினரும் துக்கம் மேலிட மொட்டையடித்து கொண்டனர். இன்றைக்கும் அவரது ஜெயந்தியன்று இந்த நிகழ்வைப் பார்க்க முடியும்.
ஒரு மனநலம் குன்றிய கதாபாத்திரமாக படத்தின் கதாநாயகர் சித்திரிக்கப்பட்டு அதற்கு 'தெய்வத் திருமகன்' பெயர் சூட்டப்பட்டிருக்கிறது என்பதுதான் அதிர்ச்சியின் உச்சம், இதில் எந்த சமரசத்திற்கும் இடம் இல்லை. இந்த செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
தேசியமும், தெய்வீகமும், இரு கண்கள் எனச்சொன்ன பசும்பொன் தேவரை இழிவுபடுத்தும் வகையில் இந்த சினிமாவுக்கு பெயர் சூட்டியிருப்பதை பொறுத்து கொள்ள முடியாது.
“ஒச்சாயி” என்ற படத்தின் பெயரை தமிழ்ப்பெயரா எனக்கேள்வி எழுப்பி, அந்தபடத்துக்கு கேளிக்கை வரி ரத்து செய்ய அதிகாரிகள் மறுத்தார்கள். முதல்-அமைச்சர் தலையிட்டு ஓச்சாயி திரைப்படத்திற்கு கேளிக்கை வரி ரத்து செய்யப்பட்டது என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு தெரியப்படுத்துகிறோம்.
அரசியலிலும், ஆன்மீகத்திலும் கொடிகட்டிப் பறந்த பசும்பொன் முத்து ராமலிங்கத்தேவரின் புகழை களங்கப்படுத்தும் நோக்கத்தோடு விக்ரம் நடித்து விரைவில் வெளிவரக்கூடிய 'தெய்வத் திருமகன்' திரைப் படத்தை தடைசெய்ய வேண்டும் என தமிழ் மாநில சிவசேனா கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
-இவ்வாறு அம்மனுவில் குறிப்பிட்டுள்ளது.

No comments:
Post a Comment