சபரிமலையில் மகரவிளக்கு மனிதர்களால் தான் ஏற்றப்படுகிறது என்று திருவிதாங்கூர் தேவசம்போர்டு கேரள உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் 14-ம் தேதி மகரவிளக்கு தினத்தன்று சபரிமலை புல்மேட்டில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 102 பக்தர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு பிறகு மகரஜோதி தானாக தெரிகிறதா அல்லது மனிதர்களால் ஏற்றப்படுகிறதா என்ற சர்ச்சை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மகரஜோதி தெய்வீகமானது என கருதி லட்சக்கணக்கானோர் சபரி்மலையில் குவிவதால் தான் விபத்து ஏற்படுகிறது. எனவே, இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கேரள உயர் நீதிமன்றத்தில் பல்வேறு அமைப்புகள் வழக்குகள் தொடர்ந்தன.
இதை விசாரித்த உயர் நீதிமன்றம் மகரஜோதி எவ்வாறு தோன்றுகிறது என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு தேவசம்போர்டுக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில் தேவசம்போர்டு நேற்று உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் கூறியிருப்பதாவது,
மகரஜோதி வேறு, மகரவிளக்கு வேறு. மகரஜோதி என்பது ஆகாயத்தில் தெரியும் நட்சத்திரம். மகரவிளக்கு என்பது பொன்னம்பலமேட்டில் மனிதர்களால் ஏற்றப்படுகிறது. திருவிதாங்கூர் தேவசம்போர்டு உருவாவதற்கு முன்னரே காலம் காலமாக பொன்னம்பலமேட்டில் ஆதிவாசிகள் ஏற்றும் தீபம்தான் மகரவிளக்கு.
மகரவிளக்கை புனிதமாகக் கருதி பக்தர்கள் வருவதால் தேவசம்போர்டே அதே பகுதியைச் சேர்ந்தவர்களை வைத்து தீபம் ஏற்றி வருகிறது. உயர் நீதிமன்றம் அனுமதித்தால் இனிமேல் அப்பகுதியில் பூசாரிகளை வைத்து தீபாராதனை நடத்த தேவசம்போர்டு தயாராக உள்ளது. இதற்கு வனத்துறை மற்றும் மின்வாரியத்துறை அனுமதி தேவை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment