ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர் வி.சி.சந்திரகுமாருக்கு ஆதரவாக வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தத்தில் பிரேமலதா திறந்த வேனில் நின்று பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர், ‘’ யாரையும் திட்டி, அதன் மூலம் ஓட்டுகளை வாங்க வேண்டிய அவசியம் தே.மு.தி.கவுக்கு இல்லை. ஆனால், தவறுகள் இருந்தால் அதை சுட்டிக் காட்டவேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. இந்த மண் பெரியார் பிறந்த மண். மஞ்சளின் மகிமை கொண்ட மண். இந்த மண்ணை சேர்ந்தவர்கள் தமிழின துரோகிகளையும், எம்.ஜி.ஆருக்கு துரோகம் செய்தவர்களையும் விரட்டி அடிப்பார்கள்.
இந்த பகுதியை பொறுத்த மட்டில் விசைத்தறி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. தே.மு.திக. வெற்றிபெற்றால் நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த உங்களுக்காக குரல் கொடுப்போம்.
அ.தி. மு.க.-தே.மு.தி.க. கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தால் தமிழகம் முழுவதும் 24 மணிநேரமும் தடை இல்லா மின்சாரத்தை வழங்குவதையே முதல் கடமையாக கொண்டு செயல்படுவோம் என்பதை உறுதியாக கூறுகிறேன்.
இது சாதாரண கூட்டணி அல்ல. புரட்சி கூட்டணி. புரட்சிதலைவர் தொடங்கிய கட்சி. புரட்சிதலைவி வழி நடத்தும் கட்சியுடன் நம் புரட்சி கலைஞர் இணைந்திருக்கும் இந்த புரட்சி கூட்டணிதான் வெற்றி கூட்டணி. 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்று ஆட்சியை அமைக்கப் போகும் கூட்டணி.
சேலம் மாநாட்டில் தமிழக மக்களை காக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் விஜயகாந்த் கூட்டணி என்ற முடிவெடுத்தார். உங்களுக்காக எந்த நிபந்தனையும் விதிக்காமல் கூட்டணிக்கு ஒத்துக்கொண்டார். எனவே நீங்கள் உறுதியாக இருந்து மக்களை காக்க வேண்டும்.
வாழ்க்கை சக்கரத்தில் கீழே இருப்பவர்கள் மேலே வரலாம். மேலே இருப்பவர்கள் கீழே வருவார்கள். இது நம்முடைய சுற்று. நாம் மேலே வந்து ஆட்சியை பிடிப்போம்’’ என்று பேசினார்.
இதையடுத்து சூலூர் தொகுதியில் பிரசாரம் செய்த பிரேமலதா,
’’தி.மு.க.வினருக்கு பொய்யை தவிர வேறு எதுவும் தெரியாது. 6 கோடி மக்களுக்கு இலவச கலர் டி.வி. கொடுப்பதாக கூறி விட்டு 3 கோடி மக்களுக்கு தான் கொடுத்துள்ளனர். பல இடங்களில் டி.வி. சரியாக எடுக்கவில்லை.
ஆப் ஆகி விடுவதாக பொதுமக்கள் என்னிடம் புகார் தெரிவித்தனர். இந்த தேர்தலுடன் டி.வி. மட்டுமின்றி ஆட்சியும் ஆப் ஆகிவிடும். தர்மபுரியில் பிரச்சாரத்தின் போது கேப்டன் வேட்பாளரை அடித்ததாக ஒரு தொலைக்காட்சியில் மாறி மாறி காண்பித்தனர். ஆனால் கேப்டன் வேட்பாளரை அடிக்கவில்லை. மைக் சரி இல்லாததால் உதவியாளர் பார்த்தசாரதி வேறு மைக் எடுத்து வந்தார்.
அவரை மேலே வரவேண்டாம் என்று தான் தடுத்தார். வேட்பாளரை அடிக்க வில்லை. இத்தேர்தல் தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் நடக்கும் யுத்தம். இதில் தர்மம் வெல்லும். இக்கூட்டணி வெற்றி பெற்று அம்மா முதலமைச்சர் ஆவார்’’ என்று பேசினார்.
No comments:
Post a Comment