ஆன்மிக குரு சத்ய சாய்பாபாவின் முக்கிய உடல் உறுப்புகள் செயல் இழந்ததால், கடந்த மாதம் (மார்ச்) 28-ந்தேதி, புட்டபர்த்தி அருகில் உள்ள சத்ய சாய் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், பாபாவின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
நேற்று முன்தினம் இருந்ததைப்போல், நேற்றும் அவருடைய உடல்நிலை மிகவும் கவலைக்கிடமான நிலையிலேயே இருந்ததாக, மருத்துவ மனையின் இயக்குனர் டாக்டர் சபாயா வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில் தெரிவித்து இருக்கிறார்.
"பாபாவுக்கு தொடர்ந்து செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. நேற்று காலையில் சிறுநீரக செயல்பாட்டை சீராக்குவதற்காக `ஹீமோ டயாலிசிஸ்' செய்யப்பட்டது. சிறப்பு டாக்டர்கள் குழுவினர், 24 மணி நேரமும் அவருடைய உடல் நிலையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறார்கள்'' என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
சாய்பாபா உடல் நிலை குறித்து ஆந்திர மாநில மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் ரவிராஜ் நிருபர்களிடம்,
’’பாபாவின் இருதயம் மிகவும் பலவீனமாக உள்ளது. ரத்த அழுத்தம் வழக்கமாக குறைவாக இருந்தாலும், மருந்துகள் மூலம் கிட்டத்தட்ட சீரான நிலைக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. கல்லீரல் செயல்பாடு மோசமாக உள்ளது. சிறுநீரகங்கள் செயல்படாததால் அவருக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஜீரண உறுப்புகளும் சரிவர செயல்படாததால், நரம்பு மூலம் அவருக்கு உணவு செலுத்தப்பட்டு வருகிறது. நரம்பு மண்டலம் மற்றும் மூளை செயல்பாட்டை பொறுத்தவரை, சாய்பாபா தொடர்ந்து மயக்க நிலையிலேயே இருந்து வருகிறார்.
செயற்கை சுவாச கருவிகளை அகற்றிவிட்டால், அவரால் மூச்சுவிட முடியாது. கிட்டத்தட்ட பாபாவின் அனைத்து உறுப்புகளுமே செயற்கை கருவிகளின் ஆதரவுடன்தான் செயல்பட்டு வருகின்றன.
செயற்கை சுவாச கருவிகள் பொருத்தப்பட்டு இருப்பதால், அவருடைய உணர்வு திறன் எந்த அளவுக்கு உள்ளது என்பதை துல்லியமாக மதிப்பிட முடியவில்லை.
எனவே அவருடைய உடல்நிலை குறித்து திட்டவட்டமாக எதுவும் கூற முடியாது. முக்கிய உறுப்புகள் சிகிச்சையை ஏற்றுக்கொள்வதை நிறுத்திவிட்டால், அடுத்த கட்ட மருத்துவ அறிக்கை வெளியிடப்படும்’’என்று கூறினார்.

No comments:
Post a Comment