ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள 5 வீரர்கள் 15 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய கிரிக்கெட் வீரர்கள் 5 பேர் ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து பிசிசிஐ இன்று மாலை அவசரமாகக் கூடியது. அந்த கூட்டத்தில் ஸ்பாட் பிக்சிங் குற்ற்ச்சாட்டு பற்றி விவாதிக்கப்பட்டது. இறுதியில் ஸ்பாட் பிக்சிங் சர்ச்சையில் சி்க்கியுள்ள வீரர்கள் ஷாலப் ஸ்ரீவஸ்தவா (கிங்ஸ் XI பஞ்சாப்), டிபி சுதிந்திரா(டெக்கன் சார்ஜர்ஸ்), மோனிஷ் மிஷ்ரா( புனே வாரியர்ஸ்), அபினவ் பாலி மற்றும் அமித் யாதவ் (கிங்ஸ் XI பஞ்சாப்) ஆகியோரை ஐபிஎல் நிர்வாகக் குழு 15 நாட்கள் சஸ்பெண்ட் செய்துள்ளது.
பிசிசிஐயின் புதிய ஊழல் தடுப்பு குழு தலைவர் ரவி சாவானியை இது குறித்து விசாரணை நடத்தி 15 நாட்களுக்குள் அறிக்கை அளிக்குமாறு நிர்வாகக் குழு கேட்டுக் கொண்டுள்ளது.
ஐபிஎல் போட்டியில் ஸ்பாட் பிக்சிங் நடப்பதை ஒரு டிவி சேனல் நேற்று வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது. ஷாலப் ஒரு ஐபிஎல் போட்டியில் நோ பால் போட ரூ.10 லட்சம் கேட்டதாக அது குற்றம் சாட்டியதுடன் அது தொடர்பான வீடியோ ஆதாரங்களையும் வெளியிட்டுள்ளது. மேலும் ஐபிஎல் தவிர முதல் தர போட்டிகளிலும் மேட்ச் பிக்சிங் நடப்பதாகவும், இதில் பெண்களுக்கு முக்கிய பங்கு உள்ளதாகவும் அந்த சேனல் தெரிவித்துள்ளது.
இது தவிர ஐபிஎல் போட்டியில் விளையாடும் வீரர்களுக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட தொகை போக கூடுதலாக லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் அந்த சேனல் குற்றம் சாட்டியுள்ளது.
இது குறித்து பிசிசிஐ தலைவர் என். சீனிவாசன் கூறுகையில்,
போட்டியின் கண்ணியம் காக்கப்படும். நாங்கள் கடும் நடவடிக்கை எடுப்போம். இந்த குற்றச்சாட்டு தொடர்பான வீடியோ ஆதாரங்களைப் பார்த்த பிறகு அதில் உள்ள வீரர்கள் யார், யார் என்பதை அறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
No comments:
Post a Comment