தமிழகத்தில் நிலவிவரும் மின்பற்றாக்குறை விரைவில் நீக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
தமிழகத்தில் மின்வெட்டு தொடர்ந்து வருகிறது. பொது மக்களும், தொழிற்சாலைகளும் பெரும் அவதிக்குள்ளாகி வரும் நிலையில்,
இன்று சட்டசபையில் ஜெயலலிதா கூறுகையில்,
தமிழகத்தில் நிலவிவரும் மின்பற்றாக்குறை விரைவில் நீக்கப்படும். தமிழகத்தில் மின்பற்றாக்குறை முழுவதுமாக நீங்கவில்லை என்பதை நன்கு உணர்ந்துள்ளேன்.
எனது தலைமையிலான அரசு இதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அரசின் நடவடிக்கைகளுக்கு அனைத்து கட்சிகளும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார்.
பஸ் கட்டணம், பால் விலையை குறைப்பீர்கள் என்று எதிர்பார்த்தோம்-தேமுதிக:
முன்னதாக தேமுதிக எம்.எல்.ஏ. சந்திரகுமார் பேசுகையில், அதிமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டு காலத்தில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு பல்வேறு பணிகள் நடக்கிறது. அதற்காக அரசைப் பாராட்டி அனைத்து உறுப்பினர்களும் பேசி உள்ளனர். எதிர்க்கட்சி என்ற முறையில் இங்கு எங்கள் கருத்துக்களை கூறுகிறேன்.
உயர்த்தப்பட்ட பஸ் கட்டணம், பால் விலை ஆகியவற்றை குறைப்பார்கள் என்று இந்த கூட்டத்தொடர் முடியும் வரை எதிர்பார்த்தோம். ஆனால் எந்த அறிவிப்பும் வரவில்லை. மாற்றம் தந்த மக்களுக்கு ஏற்றம் தரும் அரசாக விளம்பரப்படுத்தப்படுகிறது. ஆனால் உயர்த்தப்பட்ட கட்டண உயர்வுகளை இதுவரை குறைக்காததால் எங்கள் எதிர்ப்பார்ப்பு பொய்த்துப் போய்விட்டது. இந்த கட்டண உயர்வுகளை குறைக்க வேண்டும் என்றார்.
அப்போது சில அதிமுக எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து முதல்வர் ஜெயலலிதா தலையிட்டு, யாரும் இடையூறு செய்யவேண்டாம். அவர் தொடர்ந்து பேசட்டும் என்றார். இதையடுத்து தொடர்ந்து நடந்த விவாதம்,
சபாநாயகர் ஜெயக்குமார்: முதல்வர் பெருந்தன்மையுடன் நடந்து கொண்டது போல் உறுப்பினர் சந்திர குமாரும் நடந்து கொள்ள வேண்டும்.
சந்திரகுமார்: இந்த அவையில் பலமுறை எங்களுக்கு பேச அனுமதி மறுக்கப்பட்டது. நாங்கள் பலமுறை வெளிநடப்புகூட செய்திருக்கிறோம். இந்த ஆட்சி பொறுப்பேற்றபிறகு அடித்தட்டு மக்களை பாதிக்கும் வகையில் பஸ் கட்டணம் உயர்வு அமைந்துள்ளது. அதை இந்த அரசு சீர்செய்ய வேண்டும்.
முதல்வர் ஜெயலலிதா: முந்தைய திமுக ஆட்சியில் இருந்த கட்டணம்போல் வைக்க வேண்டும் என்றால் எப்படி நிர்வாகத்தை சீர்செய்வது என்பதையும் உறுப்பினர் விளக்கினால் நன்றாக இருக்கும்.
சந்திரகுமார்: உங்கள் பின்னால்தான் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் எல்லோரும் உள்ளனர்.
ஜெயலலிதா: ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்தான் சரிப்படுத்த வேண்டும் என்றால் உங்களுக்கே நீங்கள் என்ன பேசுகிறார்கள் என தெரியவில்லை என்றுதான் அர்த்தம்.
சந்திரகுமார்: எல்லா திட்டங்களுக்கும் அரசு மானியம் தருவதுபோல் இவைகளுக்கும் மானியம் கொடுத்திருக்கலாம். பஸ், பால் கட்டண உயர்வை தவிர்த்திருக்கலாம். கரும்புக்கு டன்னுக்கு ரூ. 2500 வழங்கப்படும் என்று எதிர்பார்த்தோம். கொங்கு மண்டலத்தில் மஞ்சள் விவசாயம் கடந்த ஆட்சியின் போது 1 டன்னுக்கு ரூ. 10,000 வரை விற்பனை நடந்தது. ஆனால் இப்போது டன் ரூ. 3,000க்குத் தான் விலை போகிறது. விவசாய மக்கள் இதனால் விலையின்றி தவிக்கிறார்கள். இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். அது உங்களுக்கு வருத்தம் அளிக்கும் என்றார்.
No comments:
Post a Comment