புதிய தலைமைச் செயலக கட்டடத்தை மருத்துவமனையாக மாற்ற, மாநில சுற்றுச்சூழல் தாக்கீடு மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது.
கடந்த தி.மு.க., ஆட்சியில், எம்.எல்.ஏ.,க்கள் விடுதி அமைந்திருந்த, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில், புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டது. ஆட்சி மாற்றம் நிகழ்ந்ததும், "புதிய தலைமைச் செயலக கட்டடம், நவீன மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்வி ஆராய்ச்சிக்கு உரிய வகையில் மாற்றி அமைக்கப்படும்' என, கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில், முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். முதல்வரின் இந்த அறிவிப்பை எதிர்த்து, ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அதில், "மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி பெறாமல், புதிய தலைமைச் செயலக கட்டடத்தை மாற்றி அமைக்கக் கூடாது' என, கோர்ட் உத்தரவிட்டது. இதனால், இக்கட்டடத்தை மருத்துவமனையாக மாற்றுவதில் தாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும், மாநில சுற்றுச்சூழல் தாக்கீடு மதிப்பீட்டு ஆணையம், புதிய தலைமைச் செயலக கட்டடத்தை மருத்துவமனையாக மாற்றுவதற்கான அனுமதியை வழங்கி உள்ளது. இதுகுறித்து, ஆணையத்தின் தலைவர் தங்கவேலு கூறும்போது, ""புதிய தலைமைச் செயலக கட்டடத்தை மாற்றி அமைப்பது தொடர்பாக, மாநில சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக் குழு, தமது பரிந்துரையை ஆணையத்திற்கு சமீபத்தில் அளித்தது. அதன் அடிப்படையில், தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது,'' என்றார். இதையடுத்து, புதிய தலைமைச் செயலகத்தை நவீன மருத்துவமனையாக மாற்றுவதற்கு அனுமதிக்கோரி, தமிழக அரசு, ஐகோர்ட்டில் விரைவில் மேல் முறையீடு செய்யும் என தெரிகிறது.

No comments:
Post a Comment