புதுக்கோட்டை இடைத்தேர்தலில் வாக்கு சாவடியை புறக்கணித்து தங்கள் எதிர்ப்பை காட்ட தி.மு.க வினர் முடிவு செய்துள்ளதாக தெரிய வருகிறது.
இடைத் தேர்தலில் அ.தி.மு.க தங்கள் கட்சி வேட்பாளரை அறிவித்த அடுத்த சில மணி நேரங்களில் தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவித்தது. இதனால் ஆளும் கட்சிக்கு துணையாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என்று விமர்சனங்கள் கிளம்பியது.
இந்த நிலையில் அ.தி.மு.க வை எதிர்த்து எம்.எல்.ஏ முத்துக்குமரனை இழந்து தொகுதியையும் இழந்துள்ள சி.பி.ஐ போட்டிக்கு வரும் என்றும், அப்படி போட்டியிட்டால் சி.பி.ஐ க்கு ஆதரவளித்து வெற்றி பெற செய்து அ.தி.மு.க வை தோற்கடிக்க எதிர்கட்சிகளான தி.மு.க, தே.மு.தி.க, ம.தி.மு.க, சி.பி.எம், பா.ம.க, வி.சி. பா.ஜ.க போன்ற எதிர்கட்சிகள் திட்டமிட்டிருந்தன. ஆனால் மற்ற கட்சிகளின் எதிர்பார்ப்பை பொய்யாக்கும் விதமாக சி.பி.ஐ போட்டி இல்லை என்று மாநில செயலாளர் தா.பாண்டியன் அறிவித்தார்.
இந்த நிலையில் தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை இல்லை என்று காரணம் சொல்லி தி.மு.க தலைவர் கலைஞர் தேர்தல் புறக்கணிப்பு என்று அறிவித்தார். அதே போல ம.தி.மு.க, சி.பி.எம், பா.ம.க, வி.சி. பா.ஜ.க போன்ற கட்சிகள் தேர்தல் புறக்கணிப்பை அறிவித்து விட்டன.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜனநாயகம் படும்பாடு என்று தி.மு.க பொது கூட்டத்தில் பேசிய மாஜி அமைச்சர் ரகுபதி தேர்தல் புறக்கணிப்பு என்பதை பதிவு செய்யும் விதமாக 49- 0 போட வேண்டும் என்று பேசினார். இந்த பேச்சு பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இந்நிலையில், தி.மு.க இன்னும் சில நாளில் முக்கிய முடிவு அறிவக்க உள்ளது. அந்த அறிவிப்பில் ஜனநாயகத்திற்கு விரோதமாக நடக்கும் இந்த தேர்தலை புறக்கணிக்கும் விதமாக தி.மு.க தொண்டர்களும், அவர்களை சார்ந்தவர்களும் வாக்கு சாவடிக்கு போகாமல் வாக்களிக்காமல் புறக்கணிக்க வேண்டும் என்ற அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வரும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment