பிரபல கன்னட நடிகை ஹரிப்ரியா. இவர் தமிழில் அர்ஜுனுடன் 'வல்லக்கோட்டை' படத்தில் நடித்தார். கரணுடன் 'கனகவேல் காக்க' படத்திலும், சேரனுடன் 'முரண்' படத்திலும் நடித்துள்ளார். தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்து உள்ளார்.
ஹரிப்ரியா வீடு பெங்களூரில் உள்ளது. அந்த வீட்டில் சி.பி.ஐ. போலீசார் நேற்று அதிரடியாக புகுந்து சோதனை நடத்தியதாக தகவல் வெளியானது. சுரங்க ஊழல் புகாரில் சிக்கிய கர்நாடக முன்னாள் முதல்- மந்திரி எடியூரப்பா வீடுகளில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்திக் கொண்டிருந்த அதே நேரத்தில் ஒரு குழுவினர் ஹரிப்ரியா வீட்டில் புகுந்து சோதனை போட்டதாக கூறப்பட்டது.
எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா வீட்டிலும் சோதனை நடந்தது. விஜயேந்திராவுக்கும், ஹரிப்ரியாவுக்கும் நெருக்கமான தொடர்பு இருப்பதாகவும் எனவே தான் ஹரிப்ரியா வீட்டில் இந்த சோதனை நடந்ததாகவும் தகவல் வெளியானது.
ஆனால் இந்த செய்தியை ஹரிப்ரியா அடியோடு மறுத்தார். அவர் கூறியதாவது:-
என் வீட்டில் சி.பி.ஐ. சோதனை நடந்தததாக டெலிவிஷனில் வெளியான செய்தியை பார்த்து அதிர்ச்சியானேன். அப்படி எந்த சோதனையும் நடக்கவில்லை. எடியூரப்பாவின் மகன் விஜயேந்திராவுடன் எனக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுவது வதந்திதான்.
அவரைப் பற்றி இதற்கு முன் கேள்விப்பட்டதே இல்லை. நேரில் சந்தித்ததும் இல்லை. அவருடன் நான் நெருக்கமாக இருக்கிறேன் என்பது மனதை புண்படுத்துகிறது. என்னைப் பற்றி இதுபோன்ற வதந்திகள் ஏன் கிளம்புகின்றன என்று புரியவில்லை. ஏற்கனவே இதுபோல் என்னைப் பற்றி வதந்திகள் பரப்பப்பட்டன. இப்போது மீண்டும் வந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
போலீஸ் தரப்பிலும் ஹரிப்ரியா வீட்டில் சோதனை நடக்கவில்லை என மறுத்தனர்.

No comments:
Post a Comment