மும்பை ஜுஹு கடற்கரை அருகே உள்ள ஒரு பெரிய ஹோட்டலில் நடந்த மது, போதை விருந்தில் கலந்து கொண்ட வெளிநாட்டவர்கள் உள்பட 96 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். புனோ வாரியர்ஸ் அணி வீரர்கள் ராகுல் ஷர்மா மற்றும் வெய்ன் பார்னல், பிரபலங்களின் வாரிசுகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மும்பை ஜுஹு கடற்கரை அருகே உள்ள ஓக்வுட் பிரீமியர் ஹோட்டலின் மொட்டை மாடியில் நேற்றிரவு மது, போதை விருந்து நடந்தது. அதில் வெளிநாட்டவர்கள், ஐபிஎல் வீரர்கள், பிரபலங்களின் வாரிசுகள் என ஏராளமானோர் கலந்து கொண்டு மது அருந்தி, போதை பொருள் உட்கொண்டு கும்மாளம் போட்டனர். இது குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் நேற்று இரவு 8 மணி அளவில் அந்த ஹோட்டலுக்கு சென்று அங்கு கும்மாளம் போட்ட வெளிநாட்டவர்கள் உள்பட 96 பேரை கைது செய்தனர். மேலும் புனே வாரியர்ஸ் வீரர்கள் ராகுல் ஷர்மா மற்றும் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த வெய்ன் பார்னல் மற்றும் பிரபலங்களின் வாரிசுகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விருந்து ஏற்பாட்டாளர் விஜய் ஹண்டாவும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதானவர்களின் ரத்தம் மற்றும் சிறுநீர் மாதிரிகள் சோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. கைதானவர்களில் அடையாளம் காணப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டனர். பரிசோதனையில் அவர்கள் போதைப் பொருட்கள் உட்கொண்டது தெரிய வந்தால் அவர்களிடம் விசாரணை நடத்தப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.
விருந்து நடந்த இடத்தில் இருந்து கொக்கைன், எக்ஸ்டசி மற்றும் சாராஸ் ஆகிய போதை வஸ்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைதான 96 பேரில் 58 ஆண்கள் மற்றும் 38 பெண்கள் அடக்கம்.
No comments:
Post a Comment