டோணிக்கு ஒரு ராசி உண்டு. எப்படியாவது இறுதிப் போட்டிக்கு வந்து விடும் அவரது தலைமையிலான அணி. அப்படித்தான் இப்போதும் ஐபிஎல் இறுதிச் சுற்றுக்கு அது வந்து நிற்கிறது - தட்டுத் தடுமாறி.
ஆரம்பத்திலிருந்தே அபசகுணமாகத்தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஐந்தாவது ஐபிஎல் பயணம் தொடங்கியது. தனது முதல் போட்டியிலேயே, அதுவும் சென்னையில் நடந்த போட்டியிலேயே மும்பை இந்தியன்ஸிடம் செமத்தியாக அடி வாங்கியது. இப்போது மீண்டும் மும்பை இந்தியன்ஸுடன் பிளே ஆப் போட்டியில் மோதப் போகிறது சென்னை.
நான்கு ஐபிஎல் தொடர்களில் மூன்று முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறிய ஒரே அணி சென்னைதான். அதில் இரண்டு முறை கோப்பையைத் தட்டிச் சென்றுள்ளது. அந்த இரண்டு முறையும் தொடர்ச்சியாக அது வென்றது. தற்போது நடப்புச் சாம்பியனாக உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் 3வது முறையாக கோப்பையை வெல்ல இன்னும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது - டெக்கான் சார்ஜர்ஸ் நேற்று நடந்த தனது இறுதி லீக் போட்டியில் வென்றதன் மூலம்.
இறுதிச் சுற்றுக்கு வருவார்களா என்பதே கேள்விக்குறியாக இருந்த நிலையில், சென்னை அணி முற்றிலும் அதிர்ஷ்டத்தை நம்பியே இருந்தது. தனக்குக் கீழ் இருந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், கிங்ஸ் லெவன் பஞ்சாப், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் கண்டிப்பாக தங்களது கடைசி லீக் போட்டிகளில் தோற்றாக வேண்டும். அப்போதுதான் சென்னையால் இறுதிச் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலை. அதுபோலவே நடந்ததால், சென்னைக்கு லக்கி பிரைஸ் அடித்து இப்போது பிளே ஆப் பிரிவுக்கு வந்து நிற்கிறது.
ரன் ரேட் அடிப்படையில் தற்போது தனக்கு சமமான புள்ளிகளைப் பெற்றிருந்த பெங்களூர் அணியை பின்னுக்குத் தள்ளி விட்டு நான்காவது இடத்தைப் பிடித்து எலிமினேட்டர் பிரிவுக்கு போய் விட்டது சென்னை.
இறுதிப் போட்டிக்கு முன்பு 3 போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்தப் போட்டிகளுக்கு குவாலிபையர் மற்றும் எலிமினேட்டர் எனப் பெயர். முதல் குவாலிபையர் போட்டியில் கொல்கத்தாவும், டெல்லியும் மோதவுள்ளன.
அடுத்து நடைபெறவுள்ள எலிமினேட்டர் போட்டியில் சென்னையும், மும்பை இந்தியன்ஸும் சந்திக்கவுள்ளன.
இதில் வினோதம் என்னவென்றால் முதல் குவாலிபையர் போட்டியில் வெல்லும் அணி இறுதிக்குத் தகுதி பெறும். அதேசமயம், தோற்கும் அணிக்கு இன்னொரு வாய்ப்பு உள்ளது. அதாவது எலிமினேட்டர் போட்டியில் வெல்லும் அணியுடன் அது 2வது குவாலிபையர் போட்டியில் பங்கேற்கும். அதில் வெல்லும் அணியே இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும் 2வது அணியாக இருக்கும்.
எனவே அந்த வகையில் சென்னைக்கு இன்னொரு சோதனை காத்திருக்கிறது. இந்த அணி, எலிமினேட்டர் பிரிவில் இருக்கிறது. எனவே இதில் தோற்றால் வீட்டுக்குப் போக வேண்டியதுதான். ஒரு வேளை ஜெயித்தாலும், 2வது குவாலிபையர் போட்டியிலும் அது வென்றாக வேண்டும். அப்போதுதான் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற முடியும்.
எனவே சென்னை அணிக்கு இன்னும் சோதனை போகவில்லை, கண்டத்தைத் தாண்டவில்லை. இதுவரை சொதசொதப்பாக ஆடி வந்த சென்னை அணி இனியாவது விஸ்வரூபம் காட்டி விளாசித் தள்ளினால் மட்டுமே இறுதிப் போட்டிக்குப் போக முடியும். இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது சென்னை என்பதால், சென்னை சூப்பர் கிங்ஸ் அங்கு வர வேண்டும் என்ற பெரும் ஆவலுடன் சென்னை ரசிகர்கள் காத்துள்ளனர்.
No comments:
Post a Comment