தமிழ் சினிமா தற்போது மிக ஆரோக்கியமான பாதையில் பயணிக்கிறது என்றே சொல்லலாம். புதிய கதை களங்கள், யதார்த்த சினிமா என்று இயக்குநர்கள் தன்னை அடையாளப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் வெளியான வழக்கு எண் திரைப்படம், பல பாராட்டுகளை பெற்று வருகிறது. காதல் பட இயக்குநர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில், லிங்குசாமி தயாரிப்பில், முற்றிலும் புதுமுகங்கள் நடிப்பில் உருவான படம் வழக்கு எண் 18/9. காதலின் வலியையும், குழந்தைகள் வளர்ப்பு பற்றி பெற்றோருக்கும் ஒரு பாடம் சொல்லி தரும் படமாக இப்படத்தை எடுத்த இயக்குநருக்கு பாராட்டுகள் குவிகின்றது.
இந்நிலையில் இயக்குநர்கள் சங்கம் சார்பில் மாற்று சினிமாவிற்கான கலந்துரையாடல் என்று வழக்கு எண் 18/9 படம் பற்றி பேசப்பட்டது. இயக்குநர்கள் வசந்தபாலன், சமுத்திரகனி, ஜனநாதன், அமீர், பாக்யராஜ், பாலுமகேந்திரா, சுசீந்திரன், பாண்டியராஜ் உள்ளிட்ட பலரும், உதவி இயக்குநர்கள் மற்றும் வழக்கு எண் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
விழாவில் பாலுமகேந்திரா தலைமை உரை ஏற்று பேசும்போது, சமீபத்தில் நான் பார்த்த படங்களில் வழக்கு எண் படம் என்னை ரொம்ப பாதித்தது. படம் பாத்து விட்டு பாலாஜியை போன் செய்து பேசினேன், நல்ல வேலை நீங்கள் இப்போது இங்கு இல்லை, இருந்திருந்தால் உங்கள் காலை தொட்டு வணங்கி இருப்பேன் என்றேன். அவ்வளவு நேர்த்தியான படம் இது. இப்படி ஒரு படத்தை பார்க்க தான் இன்னும் இந்த உயிர் இருந்திருக்கும் போல, படம் எல்லா வகையிலும் என்னை பாதித்தது. கதை, இயக்கம், நட்சத்திர தேர்வு என்று அருமையாக ஒரு சிற்பம் போல செதுக்கி இருக்கார் பாலாஜி. தமிழில் இப்படி ஒரு படம் வந்ததை கர்வமாக நினைக்கிறேன். முன்பெல்லாம் என் தனிப்பட்ட ஆர்வத்தால் இயக்குநர்கள் சங்கம் சென்று உதவி இயக்குநர்களுக்கு வகுப்பு எடுத்திருக்கேன். அப்போது பலமுறை சண்டை போட்டு வெளியே வந்திருக்கேன், இயக்குநர்கள் சங்கம் வெறும் பணம் பட்டுவாடா செய்ய மட்டும் இருக்க கூடாது. ஆரோக்கியமா ஏதும் செய்ங்க என்று சொல்வேன். இப்போது இது நடந்திருக்கிறது.
இங்கு அனைவரும் வியாபாரிகள் தான். மாற்று சினிமா, மாமூல் சினிமா ரெண்டும் இருக்கு. வணிக சினிமாவுக்குள் இருந்து கொண்டே பல அற்புதங்களை நிகழ்த்தலாம். நான் எடுத்த அழியாத கோலங்கள், ஜூலி கணபதி, தனுஷ் படம் எல்லாமே இந்த ரகம் தான். எல்லோரும் ஈரானிய படங்களை பற்றி பெருமையாக பேசுகிறார்கள். ஆனால் அந்த மொழி படங்களிலும் பாட்டே இல்லாத படங்கள் நிறைய வந்திருக்கு. அதுபோன்ற பாட்டே இல்லாத படங்களை எடுக்க அந்த தெம்பும், தைரியமும் வீடு, சந்தியா ராகம் போன்ற படங்கள் பண்ணும் போது வந்தது. முதலில் சினிமாவை கற்றுக் கொள்ளுங்கள். வழக்கு எண் படத்தை டிஜிட்டல் ரூட் காமிராவில் எடுத்திருக்கிறார்கள். அடுத்து இனி டிஜிட்டல் தான் என்கிறார்கள். நாளைய சினிமா மாற்றம் இது. இப்போதும் கூட நான் சூட்டிங் போய்விட்டு தான் வரேன். முதல்ஷாட் காலை 6.30 மணிக்கு வைத்தேன். இப்ப எனக்கு ரொம்ப கர்வமாய் இருக்கு. இந்த வயசுலேயும் எனக்கு வேலை ஈஸியா முடிகிறது. எனக்கு கும்பல் வேண்டாம், கோடி வேண்டாம், வெறும் 5 பேரை என் உதவியாளர்களை வைத்து இப்போது படம் பண்ணி வருகிறேன். இங்கு திறமை இருந்தால் போதும், நல்ல சினிமா பண்ணலாம் என்று பேசியவர் படக்குழுவினரையும் பாராட்டினார். பாலுமகேந்திராவுக்கு இயக்குநர்கள் கையெழுத்திட்ட புகைப்படம் ஒன்றையும் பரிசாக வழங்கப்பட்டது. இதனை பாக்யராஜ் முன்னின்று எல்லா டைரக்டர்களும் சேர்ந்து வழங்கினர். நிகழ்ச்சியில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனும் படம் பற்றியும், நடிகை ரோகிணி படத்தில் நடித்த பெண் நடிகைகள் ஆகியோரை பற்றியும் பாராட்டி பேசினார்கள்.
No comments:
Post a Comment