அண்ணா அறிவாலயத் திறப்பு விழா தனது தலைமையில் நடைபெற்றதாக மதுரை ஆதீனம் கூறியுள்ளதற்கு திமுக தலைவர் கலைஞர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட கேள்வி பதில் அறிக்கை:
மதுரை ஆதினத்தைப் பற்றி நீங்கள் விமர்சனம் செய்ததாக, அவர் தனது பேட்டியிலே சொல்லியிருக்கிறாரே?
அவரது பேட்டியைப் படித்தேன். “கருணாநிதி முழுநேர அரசியல்வாதி. மூதறிஞர். அவர் என்னைப் பற்றி அவதூறாக எழுதியிருப்பது தந்தையானவர் பிள்ளையைத் திட்டுவதுபோலத்தான். ஆகவே கருணாநிதியின் அவதூறான எழுத்தைப் பொறுத்துக் கொள்ளத் தயாராகவே இருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.
ஆனால் அவர் கூறியிருப்ப தைப்போல நான் அவரைப் பற்றி அவதூறாக எதையும் கூறவில்லை. கடந்த 4-5-2012 அன்று செய்தியாளர்கள் என்னைச் சந்தித்த போதுகூட, “மதுரை ஆதீனம் குறித்து உங்கள் கருத்து என்ன?” என்று கேட்டபோது, “இதுபற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை” என்றுதான் நான் பதில் அளித்தேன்.
ஆனாலும் அவர் தேவையில்லாமல் நான் அவரைப் பற்றி அவதூறாக எழுதியதாகச் சொல்லியிருக்கிறார். மேலும் மதுரை ஆதினம் அந்தப் பேட்டியின்போது 1987இல் அவருடைய தலைமையில்தான் அண்ணா அறிவாலயத் திறப்பு விழா நடைபெற்றது என்று சொல்லியிருக்கிறார். அதுவும் தவறான செய்தியாகும்.
அண்ணா அறிவாலயத் திறப்பு விழா பேராசிரியர் தலைமையில் என்னால் திறந்து வைக்கப்பட்டது. அந்த விழாவில் மதுரை ஆதினம் கலந்து கொண்டார் என்பது மட்டுமே உண்மை.
No comments:
Post a Comment