மதுரை ஆதீனமாக நித்யானந்தாவை நியமித்ததில் எந்தவித மாற்றமும் இல்லை என்று மதுரை ஆதீனம் அருணகிரிநாதகர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பிரபல பத்திரிக்கைக்கு அளித்த பேட்டி வருமாறு,
மதுரை ஆதீனத்தின் 293வது ஆதீனமாக நித்யானந்தா பொறுப்பேற்றுள்ளார். அவரை எதிர்க்கவும், சைவ சமயத்திற்கு கேடு விளைவிக்கவும் ஒரு சிலர் தங்களை எதிர்ப்பாளர்கள் என்றும், மதுரை ஆதீன மீட்புக்குழு என்றும் கூறி தேவையில்லாமல் பிரச்சனை செய்கிறார்கள்.
மக்களிடையே பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். மதுரை ஆதீன மடத்தில் ஏராளமான பெண்கள் ஆபாசமாக உடையணிந்து நடனம் ஆடுகிறார்கள் என்றும், மடம் விபச்சார கூடமாக திகழ்கிறது என்றும் ஆதீனத்தை களங்கப்படுத்தும் வகையில் தவறான தகவல்களை தெரிவித்துள்ளனர். இதை வன்மையாகக் கண்டிக்கிறோம். அவ்வாறு அவதூறு பரப்புபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
மதுரை ஆதீன மடத்தில் 60க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளனர். அவர்கள் தினமும் கண்ணியமாக வழிபாடு செய்து வருகிறார்கள். அவர்களை களங்கப்படுத்தும் வகையில் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். இது பெண் குலத்தையே கொச்சைப்படுத்துவது போல் ஆகும்.
கடந்த ஐந்தரை ஆண்டுகளாக எனக்கு பணிவிடை செய்தவர் தம்பிரான் ஆதீனம். அவர் அதையெல்லாம் மறந்துவிட்டு எனக்கு எதிராக கருத்துகளை தெரிவித்து வருகிறார். பழையதை எல்லாம் மறந்துவிட்டு பேசக்கூடாது.
காஞ்சி ஜெயேந்திரர் நித்யானந்தாவை பற்றி கூறிய கருத்துகளை வாபஸ் பெறுவதாக தெரிவித்துள்ளார். அவரது தூதர்கள் இன்று நித்யானந்தாவை சந்திப்பார்கள். மதுரை இளைய ஆதீனமாக நித்யானந்தாவை நியமித்ததில் தவறொன்றுமில்லை. என் முடிவில் எந்தவித மாற்றமும் இல்லை. என் முடிவில் இருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டேன் என்றார்.
No comments:
Post a Comment