திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பணக்காரர்களுக்கும், நடிகை, நடிகர்களுக்கும் தான் தேவஸ்தானம் முக்கியத்துவம் அளிக்கிறது என பக்தர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். திருமலை ஏழுமலையானை தரிசனம் செய்ய ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி கடந்த வாரம் வந்தார். அங்குள்ள ஸ்ரீகிருஷ்ணா விடுதியில் தங்கினார். இவரை ஏழுமலையான் கோயில் பிரதான அர்ச்சகராக உள்ள ரமண தீட்சிதர் நேரில் சென்று பிரசாதம் வழங்கி ஆசிர்வாதம் செய்தாராம். இதுகுறித்து தகவல் அறிந்த பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் கூறுகையில், சாதாரண ஏழை மக்களை தேவஸ்தானம் கண்டுகொள்ளவில்லை. ஆனால் கோடீஸ்வரான ஆனந்த் அம்பானி யை நேரில் சென்று சந்தித்து பிரதான அர்ச்சகர் பிரசாதம் வழங்கி உள்ளார். தொழில் அதிபர்களுக்கும், நடிகை, நடிகர்களுக்கும் தான் தேவஸ்தானம் மரியாதை கொடுக்கிறது. சாதாரண மக்களை கண்டுகொள்ளவில்லை என குற்றம் சாட்டினர்.
இதுகுறித்து தலைமை செயல் அலுவலர் எல்.வி. சுப்பிரமணி கூறியதாவது: தேவஸ்தான பணியாளர்கள், கீழ்மட்டம் முதல் பிரதான அர்ச்சகர் வரை கோயில் புனித தன்மையை காப்பாற்றுவதில் அக்கறையுடனும், கவனத்துடனும் இருக்க வேண்டும். பிரதான அர்ச்சகரின் இதுபோன்ற நடவடிக்கை தவறானது. மேலும் தேவஸ்தானம் அவரை அர்ச்சகராக நியமிக்கவில்லை. அவர் பரம்பரையான மிராசு முறைப் படி அர்ச்சகராக இருந்து வருகிறார். மிராசு முறை நியமனம் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டது. ஆனால் ஒய்எஸ்ஆர் முதல்வராக இருந்தபோது மீண்டும் மிராசு முறை கொண்டு வரப்பட்டது. அதன்படி ரமண தீட்சிதர் பணி செய்து வருகிறார். பரம்பரை நியமனம் குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. இதனால் அவர் மீது நாங்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்க முடியாது. இனிமேல் இதுபோன்ற சம்பவம் நடைபெறாமலிருக்க ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே 2009ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரமண தீட்சிதர் அம்பானி குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆசி வழங்கியுள்ளார். அப்போது இருந்த தலைமை செயல் அலுவலர் கிருஷ்ணாராவ், ரமண தீட்சிதருக்கு நோட்டீஸ் வழங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.
இப்பிரச்னை குறித்து ரமண தீட்சிதர் கூறுகையில், எனது தந்தை காலத்தில் இருந்தே அம்பானி குடும்பத்தினருடன் நட்பு உள்ளதால், நான் நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்து வாழ்த்தி வந்தேன் என்றார்.

No comments:
Post a Comment