பீர் ஒன்றுக்கு இந்து கடவுளான காளியின் பெயர் வைத்ததற்காக அமெரிக்க பீர் நிறுவனம் ஒன்று மன்னிப்பு கேட்டுள்ளது.
அமெரிக்க பீர் நிறுவனமான பர்ன்சைட் ப்ரூவிங் கம்பெனி தான் தயாரித்த புது வகை பீருக்கு இந்து கடவுளான காளியின் பெயர் வைத்தது. காளி மா என்று பெயரிடப்பட்டுள்ள அந்த பீரில் ஏலக்காய், வெந்தயம், கடுகு, மிளகு உள்ளிட்ட பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அந்த பாட்டிலில் காளியின் புகைப்படமும் காண்பிக்கப்பட்டது. இது இந்து மக்களை அதிருப்தியடையச் செய்தது.
இந்த விவகாரம் நாடாளுமன்றத்திலும் பூதாகரமாக வெடித்தது. பீருக்கு காளியின் பெயர் வைத்தற்கு ராஜ்யசபா உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இந்தியாவுக்கான இந்திய தூதரை அழைத்து இது தொடர்பாக மன்னிப்பு கோருமாறு கேட்ட வேண்டும் என்றனர்.
இதையடுத்து அந்நிறுவனம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் மன்னிப்பு கோரி செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் அந்த பீர் அறிமுகத் தேதியை மே 15ல் இருந்து தள்ளி வைத்துள்ளது.
இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது,
இந்து சமூக மக்களின் கோரிக்கையை ஏற்று இந்திய மசாலாக்கள் அடங்கிய காளி மா பீரின் அறிமுக தேதியை ஒத்தி வைத்துள்ளோம். எந்த இன, மதத்தினரையும் நோகடிக்கும் எண்ணத்தில் நாங்கள் இவ்வாறு செய்யவில்லை. இன்டியானா ஜோன்ஸ் படங்களில் வரும் காளியின் பெயரைத் தான் வைத்தோம். ஆனால் அது குறிப்பிட்ட சமூகத்தினரை புண்படுத்தும் என்று தெரியாமல் போய்விட்டது.
தற்போது அந்த பெயரை நீக்கிவிட்டு புதிய பெயர் வைக்கவிருக்கிறோம். புதிய பெயர் வைக்கப்பட்டவுடன் இந்த பீர் அறிமுகப்படுத்தப்படும். இவ்வாறு பெயர் வைத்ததால் நாங்கள் யார் மனதையும் நோகடித்திருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம் என்று அதில் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment