இந்துக்களின் கடவுளான காளியின் பெயரில் அமெரிக்காவில் உள்ள ஒரு நிறுவனம் பீர் விற்பனை செய்து வருவதையடுத்து அதுகுறித்து அமெரிக்க தூதருக்கு சம்மன் அளிக்க வேண்டும் என்றும் அவரை அழைத்து விசாரிக்க வேண்டும் என்றும் மாநிலங்களவையில் இன்று பாரதிய ஜனதா கோரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தைச் சேர்ந்த 'பர்ன்சைட் பிரெவிங் கம்பெனி' என்ற நிறுவனம் 'காளி-மா' என்ற பெயரில் பீர் விற்பனை செய்து வருகிறது. அந்த பீர் பாட்டில்களில் காளியின் படமும் அச்சிடப்பட்டுள்ளன.
இது இந்துக்களின் மத உணர்வுகளை வேதனைப்படுத்துவதாக பாஜக எம்பி ரவி சங்கர் பிரசாத் மாநிலங்களவையில் கூறினார். மற்ற மதத்தினரின் கடவுள்களை இது போல பீர் பாட்டலில் காட்ட முடியுமா என்று அவர் பூஜ்ய நேரத்தின் போது கேள்வி எழுப்பினார்.
இதுகுறித்து அமெரிக்க தூதருக்கு சம்மன் அனுப்பவேண்டும் என்றும், அவரை நேரில் அழைத்து விசாரிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
இதற்கு பதிலளித்த நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சரான ராஜிவ் சுக்லா, இந்த விவகாரத்தை வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் கவனத்திற்கு உடனடியாக கொண்டுசெல்கிறேன் என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment