சீனாவில் உள்ள மானசரோவர் மற்றும் நேபாளத்தில் உள்ள முக்திநாத் ஆகிய புனித இடங்களுக்கு யாத்திரை செல்லும் இந்துக்களுக்கு தமிழக அரசு பயணச் செலவுக்கு மானியம் வழங்கும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
சட்டசபையில் இன்று விதி எண் 110ன் கீழ் அவர் தாக்கல் செய்த அறிக்கையில்,
"ஆயிரம் இன்னல்கள் வந்தாலும் இறைவனை காணும் பணி மேற்கொள்வோம்' என அனைத்து மதத்தினரும் புனித யாத்திரை மேற்கொள்கின்றனர்.
கிறிஸ்தவ பெருமக்கள் ஜெருசலம் புனித யாத்திரை மேற்கொள்ளவும், இந்துக்கள் சீனாவில் உள்ள மானசரோவர் மற்றும் நேரபாளத்தில் உள்ள முக்திநாத் புனித யாத்திரை மேற்கொள்ளவும், அரசு சார்பில் உதவி செய்யப்படும் என்று 2011ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது நான் வாக்குறுதி அளித்திருந்தேன்.
எனது வாக்குறுதியை நிறைவேற்றும் பொருட்டு, கிறிஸ்தவர்களின் புனித ஸ்தலமான, ஜெருசலம் சென்று வருவதற்கு, அரசு நிதி உதவி அளிக்கும் என்றும், இந்தத் திட்டம் அனைத்து கிறிஸ்துவப் பிரிவினரையும் உள்ளடக்கியதாக அமையும் என்றும், முதற்கட்டமாக, 500 கிறிஸ்தவர்கள் ஜெருசலம் சென்று வர ஏற்பாடு செய்யப்படும் என்றும், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் நான் அறிவித்தேன். இதனையடுத்து, இதற்கான அரசாணைகள் வெளியிடப்பட்டன.
இந்துக்களைப் பொறுத்த வரையில், ஆன்மீகம் தேடும் ஒவ்வொருவருக்கும், ஒரே ஒரு முறையாவது சீனாவில் உள்ள மானசரோவர் சென்று பார்க்க வேண்டும் என்பதும், நேபாள நாட்டில், சாளக்கிராம் மலையில் உள்ள திவ்ய தேசங்களில் ஒன்றான முக்திநாத் சென்று தரிசிக்க வேண்டும் என்பதும் அவர்களது விருப்பமாக இருந்து வருகிறது.
இதன் அடிப்படையில், இந்த திருத்தலங்களுக்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான இந்துக்கள் புனித யாத்திரை மேற்கொள்கின்றனர். இருப்பினும், பொருளாதார அடிப்படையில் பின் தங்கியுள்ள இந்து பெருமக்களுக்கு இது எட்டாக் கனியாகவே இருந்து வருகிறது.
எனவே, இதனைக் கருத்தில் கொண்டு சீனாவில் உள்ள மானசரோவர் மற்றும் நேபாள நாட்டில் உள்ள முக்திநாத் ஆகிய இடங்களுக்கு செல்ல விரும்பும் இந்துக்களின் பயணச் செலவுக்கு மானியம் வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த அரசு மானியம், மானசரோவர் புனித யாத்திரைக்குச் செல்ல இந்திய வெளியுறவுத் துறையால் தேர்வு செய்யப்படும் தமிழ்நாட்டைச் சார்ந்த 250 இந்துக்களுக்கும், முக்திநாத் புனித யாத்திரை மேற்கொள்ளும் 250 இந்துக்களுக்கும், ஆக மொத்தம் 500 பேருக்கு வழங்கப்படும்.
மானசரோவர் புனிதப் பயணத்திற்கு 1 நபருக்கு ஆகும் மொத்த செலவான 1 லட்சம் ரூபாயில் 40,000 ரூபாயும், முக்திநாத் புனிதப் பயணத்திற்கு ஒரு நபருக்கு ஆகும் செலவான 25,000 ரூபாயில், 10,000 ரூபாயும் மானியமாக வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் ஜெயலலிதா.
No comments:
Post a Comment