ஆந்திர மாநிலம், ஐதராபாத் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு மூன்று குழந்தைகள் பிறந்தன. கணவருக்கு 30 வயதும் மனைவிக்கு 25 வயதும் ஆகிறது. இருவரும் கூலி வேலை செய்கின்றனர். என்றாலும் போதிய வருமானம் இல்லாமல் குடும்பம் வறுமையில் வாடியது.
இதையடுத்து கடைசி குழந்தையான 2 வயது மகனை விற்க முடிவு செய்தனர். குழந்தை இல்லாத வசதியான தம்பதி குழந்தையை வாங்க முன் வந்தனர். அவர்களிடம் ரூ.22 ஆயிரத்துக்கு குழந்தை விற்பனை செய்யப்பட்டது. இந்த சம்பவம் 10 நாட்களுக்கு முன்பு நடைபெற்றது.
இந்நிலையில் குழந்தை விற்பனை செய்யப்பட்டதை அறிந்த பக்கத்து வீட்டுக்காரர்கள், குழந்தையின் பெற்றோரை திட்டினர். பலர் விமர்சனம் செய்தனர். இதையடுத்து, அந்த தம்பதியினர் மனம் மாறி, குழந்தையை திரும்ப பெற முடிவு செய்தனர்.
நேற்று முன்தினம் குழந்தையை வாங்கியவர் வீட்டுக்குச் சென்று இவர்கள், குழந்தையை திரும்ப தருமாறு கேட்டனர். குழந்தைக்கு விலையாக ரூ.30 ஆயிரம் தருவதாக தெரிவித்தனர். ஆனால், குழந்தையை விலைக்கு வாங்கிய தம்பதியினர், எவ்வளவு விலை கொடுத்தாலும், குழந்தையை திருப்பி தரமுடியாது என்று கூறினர். இதனால் இரு தரப்பு ஆதரவாளர்களுக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் எந்த பலனும் ஏற்படவில்லை.
இதையடுத்து போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் இரு தரப்பினரையும் அழைத்து போலீசார் விசாரித்தனர். குழுந்தையை வாங்கியவர், இரு தரப்பும் செய்து கொண்ட பத்திரங்களை ஆதாரமாக காட்டினார். சட்டப்படியே குழந்தையை தத்து எடுத்திருப்பதாக அவர் வாதிட்டார்.
இறுதியில், குழந்தையை விலைக்கு வாங்கிய அவரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். விற்கப்பட்ட குழந்தை பெற்றோரிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது. இந்த பிரச்சினையை நீதிமன்றத்தில் சந்தித்து வெற்றி பெறுவேன் என்று, குழந்தையை விலைக்கு வாங்கியவர் சவால் விட்டுள்ளார்.
No comments:
Post a Comment