லண்டனை சேர்ந்த சூசன் ஆர்டிரான் என்பவர் தனது கணவர் சிட் மற்றும் 4 குழந்தைகளுடன் கடந்த 1975ம் ஆண்டில் தென் ஆப்ரிக்காவில் குடியேறி வசித்து வந்தார். 1978ம் ஆண்டில் ஒரு கார் விபத்தில் சூசனுக்கு மனநிலை பாதித்தது. அதன்பின், அவர் தனது கணவருடன் அடிக்கடி சண்டை போட்டார். நோய் முற்றி தன்னை பற்றியே அறியாதவராக சூசன் இருந்த நிலையில், அவரை ஒரு சாலையோரமாக விட்டுவிட்டு கணவர் வீடு திரும்பினார். பின்னர், குழந்தைகளுடன் சிட் மீண்டும் லண்டனுக்கு சென்று குடியேறினார். சூசன் காணாமல் போய் விட்டதாக, சூசனின் குடும்பத்தினரிடம் சிட் கூறி விட்டார்.
இந்நிலையில், ஜோகன்னஸ்பர்க்கில் சூசனை காப்பாற்றிய ஒரு குடும்பத்தினர் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். இதற்கிடையே, சூசனின் சகோதரர் மற்றும் சகோதரிகள் அவரை கண்டுபிடிப்பதற்காக ரெட்கிராஸ் உள்பட பல அமைப்புகளின் மூலம் முயற்சித்தனர். அதற்கு எந்த பலனும் இல்லாததால் அந்த முயற்சியை கைவிட்டனர்.
தற்போது 61வயதை எட்டி விட்ட சூசன் பூரண குணம் அடைந்து பழைய நினைவுகள் திரும்பி விட்டது. அவர் தனது குழந்தைகளை பார்க்க விரும்பினார். அவருக்கு உதவிய குடும்பத்தினர் அதற்காக இங்கிலாந்தில் தெரிந்தவர்கள் மூலம் தேடிப் பார்த்தனர்.
அதில் பலன் கிடைக்கவில்லை. இந்நிலையில், பேஸ்புக்கில் சூசன் படத்தை போட்டு, அவரது கணவர், குழந்தைகள், குடும்பத்தினர் விவரங்களை குறிப்பிட்டனர். இதை பார்த்த சூசனின் சகோதரிகள் டான், ஜூலி, கெயில், சகோதரர் கோலின் ஆகியோர் உடனடியாக சூசனை தொடர்பு கொண்டு பேசினர். தனது குழந்தைகளை சூசன் மறக்காமல் பெயர் சொல்லி கூப்பிட்டது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. இப்போது லண்டனுக்கு வரவிருக்கும் சூசனுக்காக அவர்கள் காத்திருக்கின்றனர்.
No comments:
Post a Comment