இலங்கைக்கு எதிராக தமிழ்நாட்டில் எழும் எதிர்ப்புகளைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை.. ஏனெனில் மத்திய அரசு இலங்கைக்கு ஆதரவாகத்தான் இருக்கிறது என்று அந்நாட்டின் அதிபர் மகிந்த ராஜபக்சே கூறியுள்ளார்.
கொழும்பில் பத்திரிகை ஆசிரியர்களுடனான சந்திப்பின் போது மகிந்த ராஜபக்சே கூறியுள்ளதாவது:
வடக்கு, தெற்கு, கிழக்கு என்று நாட்டின் பிரச்சினையை வரையறுக்க முடியாது. இது ஒட்டுமொத்த நாட்டின் பிரச்சினை. தேசியப் பிரச்சினைக்குத் தீர்வுகாண ஒரே சிறந்த இடம் நாடாளுமன்றத் தெரிவுக்குழுதான். புலிகளைப் போல் பேச்சுக்கு வராமல் நிபந்தனைகளை விதித்து வேறுவிதமான நெருக்கடிகளைக் கொடுப்பது பெரும் தவறான விடயம். அதற்கு ஒரு போதும் அனுமதிக்க மாட்டேன்.
இணைய ஊடகங்களில் அரசு மீது சேறு பூசும் செயற்பாடுகள் குறித்து அரசு முழுக்கவனமும் கொண்டுள்ளது. ஊடகத் தர்மத்தை மீறும் எவரும் தாம் செய்வது சரியா என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். கருத்துச் சுதந்திரம் உள்ளது என்பதற்காகத் தான்தோன்றித்தனமாக செயற்படக்கூடாது.
எப்போதும் நாங்கள் இந்தியாவுடன் நட்பு அடிப்படையில் செயற்பட்டு வருகிறோம். பல்வேறு சிக்கல்கள் குறித்து நாம் இராஜதந்திர ரீதியில் பேச்சுகளை நடத்தி வருகிறோம். அண்மையில் நான் இந்தியப் பிரதமர் மன்மோகனுடன் பேச்சு நடத்தியபோது என்னுடன் இருந்த அமைச்சர் சம்பிக்க ரணவக்க நிலைமைகள் குறித்து தெளிவாக சுட்டிக்காட்டினார்.
தமிழ்நாட்டில் எமக்கு எதிராக பிரச்சினைகள் இருந்தாலும் அது எங்களுக்குத் தேவையில்லை. ஏனெனில், நாங்கள் மத்தியஅரசுடன்தான் தொடர்புட்டு செயற்பட்டு வருகிறோம். நாம் வீணாகக் குழப்பமடையத் தேவையில்லை என்றார் மகிந்த ராஜபக்சே.
No comments:
Post a Comment