லண்டன் ஒலிம்பிக்கில், போட்டிகளின் இடைவெளி நேரத்தில் பார்வையாளர்களுக்கு நடன விருந்து அளிக்க உள்ள நடன குழுவினரில், தமிழகத்தை சேர்ந்த 50 பேர் கொண்ட நடன குழு இடம் பெற்றுள்ளது.
லண்டன் ஒலிம்பிக் போட்டி இன்று அதிகாலையில் கோலாகலமான துவக்க விழாவுடன் துவங்கியது. இதில் 204 நாடுகளை சேர்ந்த மொத்தம் 10,500 வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர். இந்தியாவை சேர்ந்த 81 வீரர்கள், வீராங்கனைகள் 13 விளையாட்டுகளில் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த நிலையில் லண்டன் ஒலிம்பிக் போட்டியின் துவக்கம் மற்றும் நிறைவு விழாக்களில், கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். இதை தவிர போட்டிகளுக்கு இடையே பார்வையாளர்களுக்கு விருந்தளிக்கும் வகையில், அவ்வப்போது கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள ஆர்வம் உள்ள கலை குழுவினருக்கு தேர்வு நடைபெற்றது.
இதற்காக உலகம் எங்கும் உள்ள கலை குழுக்களை சேர்ந்த சுமார் 22 ஆயிரம் பேர் விண்ணப்பங்களை அனுப்பி இருந்தனர். இந்தியாவில் இருந்து சென்னை, டெல்லி, மும்பை ஆகிய நகரங்களை சேர்ந்த கலை குழுவினர் விண்ணப்பங்களை அனுப்பி இருந்தனர்.
இந்த நிலையில் விண்ணப்பங்களில் மொத்தம் 79 பேர் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டனர். இதில் 50 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். சென்னையில் உள்ள தி.நகரை சேர்ந்த பரதாஞ்சலி நடன பள்ளியை சேர்ந்த இவர்கள் மியூசிக் பேண்ட், பரதநாட்டியம், கதக், மயிலாட்டம், ஒயிலாட்டம் ஆகிய நமது கலை நிகழ்ச்சிகளை அரங்கேற்ற உள்ளனர்.
மேலும் டெல்லி, மும்பை இளைஞர்கள் பாங்ரா நடனம் ஆட உள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான ஜெய் ஹோ பாடலுக்கு சென்னை செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளி மாணவ-மாணவிகள் மேற்கத்திய நடனமாட உள்ளனர்.
லண்டன் ஒலிம்பிக் போட்டியில் உள்ள இடைவெளி நேரங்களில், இந்திய கலை குழுவினரின் கலை நிகழ்ச்சிகள் வரும் 31 மற்றும் ஆகஸ்டு 1ம் தேதிகளில் நடைபெற உள்ளது.
No comments:
Post a Comment